சித்ரா ' வதை  - 5 

மாணவர்கள் சென்ற வண்டியை வழிமறித்த காரிலிருந்து இறங்கி ஓடிவந்தான் ஜனா. கண்ணிமைக்கும் நேரத்தில் வேனுக்குள் பிரவேசித்தான். மற்ற எல்லோரும் இணையாக அமர்ந்திருந்தனர். சித்ரா மட்டும் அனிதாவோடு உட்கார்ந்திருந்தது கண்டு அவன் முகத்தில் திருப்தி நிலவியது. அடுத்து சிவா இருக்கும் இடத்தை நோக்கினான். ஜனாவைக் கண்டதும் சிவா தலையைக் குனிந்துகொண்டான். சுரேஷ் எழுந்து வந்து வினவினான்..

என்னாச்சு சார்?

எங்க கம்பெனி வேலை விஷயமா மதுரைக்கு போயிட்டு இருந்தோம். வழியில் உங்க வண்டியைப் பார்த்தோம். அதான் நிறுத்தினேன்.

இதில்தான் நாங்க போறோம்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?

வேன் ஸ்டான்டில் விசாரிச்சேன். எல்லா விவரமும் உனக்கு சொல்லியே ஆகணுமா? - ஜனாவின் குரலில் சூடு ஏறியது. 'சுரேஷ்.. வீண் வாதம் வேண்டாமே!' என்பதாக சித்ரா கண்களால் கெஞ்சினாள்.

அதுக்கில்லே சார்! திடீர்ன்னு வந்து வழி மறிச்சதும் நாங்க பயந்துட்டோம்! - சித்ராவின் மௌன கோரிக்கையை சுரேஷ் ஏற்றுக்கொண்டான். தணிவாகவே பேசலானான்.

அதுவா? சித்ராவுக்கு செலவுக்குன்னு ஏதும் காசு கொடுக்காம விட்டுட்டேன். அதான் கொடுத்துட்டுப் போகலாம்ன்னு.. - பையில் இருந்து சில நோட்டுகளை எடுத்தான் ஜனா.

பணம் இருக்கு! - சிக்கனமாக மென்குரலில் மொழிந்தாள் சித்ரா.

அக்கா குடுத்து விட்டுருச்சா? சரி சரி.. இந்தா இந்த செல்ஃபோனை வச்சுக்கோ. அவசியத்துக்கு பேசிக்கலாம்! - ஒரு அலைபேசியை நீட்டினான் ஜனா.

இதுக்கு தேவை இருக்காது சார். நாங்க போற இடம் ரிசர்வ் ஃபாரஸ்ட். அங்க சிக்னல் இருக்காது! முக்கியமான தகவல்ன்னா இந்த லேன்ட் லைனுக்கு சொல்லுங்க. நாங்க தங்கப்போற பங்களா நம்பர். - சுரேஷ் சில எண்களை ஒரு தாளில் எழுதி நீட்டினான்.

சரி.. அப்போ நீங்க கிளம்புங்க. நான் சொன்னது நினைப்பில் இருக்கட்டும்! - பொதுவாகச் சொல்லிவிட்டு ஜனா இறங்கிப் போனதும்தான் சில மாணவர்களுக்கு 'அப்பாடா!' என்றிருந்தது.

ஜஸ்ட்டு மிஸ்ஸு! இன்னேரம் ஹீரோவோட சேர்ந்து உட்கார்ந்திருந்தா ஹீரோயினை தொங்க விட்டுருப்பாரு மாமா. நேக்கட் ஆகாம நேக்கா நாயகி தப்பிச்சிட்டா! - ராதிகா சொன்னதை சரத் உட்பட எவரும் இரசிக்கவில்லை!

_____________________________

மதுரையில் வண்டியை நிறுத்தி மதிய உணவு, கொஞ்சம் ஷாப்பிங் என்று முடித்துக்கொண்டு கிளம்ப மதியம் மூன்றரை ஆகிவிட்டது. அதற்குப் பிறகும் வண்டி சீரான வேகத்திலேயே சென்றது. உசிலம்பட்டி தாண்டி, தேனி அல்லி நகரத்தைக் கடக்கும்போது இருள் சூழ்ந்தது. 'இங்கேயே டின்னரை முடிச்சுக்குவோமே!' என்று ஆர்த்தி சொல்ல அவ்வாறே செய்தனர். ஏழரை மணிக்கு மேல் கிளம்பி மலைப்பாதையின் துவக்கத்தை அடையும்போது வேனின் பின் டயர் வெடித்த ஓசை கேட்டது. கிட்டா பயந்தது நடந்துவிட்டது!

போண்டா.. கொஞ்சம் எல்லாரையும் கீழ இறங்கி நிக்கச் சொல்லிட்டு வீலுக்கு கட்டையக் கட்டு. அப்புறம் ஜாக்கியப் போடு. நான் மேல இருக்கற ஸ்டெப்னியை எறக்கறேன்! - கிட்டா சொல்ல, போண்டா அவ்வாறே இயங்க ஆரம்பித்தான்.

நல்ல வண்டி புடிச்சேடா விஜய்! இந்தியன் தாத்தா வண்டி மாதிரி! - திலீப் சொல்ல சிலர் சிரித்தனர். 'உங்க ரெண்டு பேரையும் பின்னாடி குந்த வச்சிருக்கப்டாதோ? அநியாயமா ஒரு புள்ளப்பூச்சி வண்டி டயரைக் காலி பண்ணிட்டிங்களேடி குந்தாணிகளா! என்று சொன்ன கணேஷ் அதற்கான பதில் மரியாதையை உடனே பெற்றான்.

ஸ்ஸ்ஸ்ஸ்.. டேய் கணேஷ்.. வெட்டிப்பேச்சு வேணாம். சுரேஷும் மத்தவங்களும் பொம்பள ஆளுகளுக்கு காவலா நிக்கட்டும். நீ வா நாம போய் ட்ரைவருக்கு ஹெல்ப் பண்ணுவோம். - குட்டு வாங்கி தலையைத் தடவிக்கொண்டு நின்ற கணேஷை இழுத்துப் போனான் சிவா.

உதவிச்சக்கரத்தை இறக்கப்போன கிட்டா கவலையோடு வண்டி மேலேயே உட்கார்ந்திருந்தான்.

என்னாச்சு ட்ரைவர்?

ஸ்டெப்னியிலயும் காத்து எறங்கிப்போய்க் கிடக்கு தம்பி! - வருத்தமும், தயக்கமும் கிட்டாவின் குரலில் கலந்திருந்தன.

சுத்தம்! ஒன்றரையணா வண்டியைப் பிடிச்சுட்டு வந்தா இப்படித்தான். ஏம்ப்பா.. கொஞ்சம் விவரமான ஆள்களை வண்டி பிடிக்க அனுப்பியிருக்கக்கூடாதா? - சரத் ஏகடியம் பேச, விஜய்க்கு சுருக்கென கோபம் வந்தது.

ஏன்? நீ போயிருக்கறதுதானே? அங்க போய்ப் பார்த்தா தெரிஞ்சிருக்கும். ஒவ்வொருத்தனும் முப்பது, முப்பத்தஞ்சுன்னு கேட்கறான். 10 நாள் வெயிட்டிங்குக்கும் வரமாட்டேன்னு சொன்னானுக. நமக்கு ஒத்து வந்தது இந்த வண்டிதான்!

அதுக்குன்னு காயலாங்கடை வண்டியையாடா கொண்டாருவே? - ராதிகாவும் விஜயை சீண்டலானாள். இப்போ என்ன சொல்ல வரே ராதிகா? என்று சங்கீதா விஜய்க்கு ஆதரவாக கோதாவில் குதிப்பதைப் பார்த்த அனிதா விவகாரம் முற்றவிடக்கூடாது என்று தலையிட்டுப் பேசலானாள்.

ராதிகா! ஆம்பளைங்க விஷயத்தில் நாம ஒதுங்கி இருக்கறதுதான் நல்லது. பங்ச்சர் ஆகாத வண்டின்னு எதுவுமே இல்லே! இந்த வண்டியிலே என்ன குறை கண்டே? போன வருசம் குற்றாலம் போனோமே.. அந்த வண்டி புதுசுதான். ஆனா ட்ரைவர் எப்படிப்பட்டவன்? கண்ணாடியத் திருப்பி வச்சுக்கிட்டு உள்ள உக்காந்திருந்த நம்மளையே குறுகுறுன்னு பார்த்துட்டே வண்டி ஓட்டினான். அதிலியும் திருப்தி இல்லாம அடிக்கொரு தரம் திரும்பித் திரும்பி உள்ள பார்த்து எவ்ளோ இரிட்டேட் பண்ணான்? ரேஷ் ட்ரைவிங், கெட்டவார்த்தை, எதிர வர்ற வண்டிக்காரனோட வம்புன்னு எவ்ளோ இம்சை கொடுத்தான்? இந்த ட்ரைவர் ஒரு தடவையாவது உள்பக்கம் பார்த்தாரா? சித்ரா மாமா கார் வந்து வழி மறிச்சப்போ சண்டைக்குப் போவாரோன்னு பயந்தேன். எவ்ளோ பொறுமையா பொறுப்பா நடந்துக்கிட்டாரு? ஏதோ ஒரு விஷயத்தை மட்டும் வச்சு குறை சொல்லாதே! - அனிதாவின் பிரசங்கம் ராதிகாவின் வாயை அடைத்தது மட்டுமில்லாமல், சக மாணவிகளின் பாராட்டையும் பெற்றுத்தந்தது!

சரி ட்ரைவர்! யோசிச்சு புண்ணியமில்லே! அந்த டயரையும் இறக்குங்க. ஏதும் போக்கு வண்டில ரெண்டு வீலையும் எடுத்துட்டுப் போய் அல்லி நகரத்தில் பஞ்சர் ஒட்டி எடுத்துட்டு வாங்க. மலைப்பாதையில் போய் வெடிக்காதவரைக்கும் நிம்மதி! - சிவா ஆறுதல் கூறினான்.

ஒரு குட்டியானை ( டாட்டா ஏஸ் மினி லாரி) வரவே இரண்டு டயர்களையும் அதில் ஏற்றிக்கொண்டு கிட்டாவும், போண்டாவும் பக்கத்து நகரத்துக்குக் கிளம்பினர்.

''சார்! வண்டி ஜாக்கியில் நிக்குது. யாராவது ஒருத்தர் மட்டும் வண்டியில் ஏறி தேவையானதை எடுத்துக்கிட்டு லாக் பண்ணிடுங்க. பக்கத்தில் ஒரு பங்களா தெரியுது பாருங்க. அங்க புள்ளைங்கள சேஃப்டியா வச்சுக்கங்க! முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துடறோம். - வண்டி சாவியைக் கொடுத்துவிட்டு கிட்டா சொன்னான்.

பரவால்ல ட்ரைவர். பொறுமையா வாங்க. பணம் ஏதும் வேணும்ன்னா வாங்கிக்கங்க. இப்போ மணி 10 ஆகப் போகுது. நீங்க திரும்பி வர ஒரு மணிக்கு மேல ஆயிடும். அதுக்கு மேல காட்டுப்பாதையில் ட்ராவல் பண்ண வேண்டாம். ஒத்தை யானை ஏதும் நின்னா ஆபத்து. விடிஞ்சுதான் நாம கிளம்பப் போறோம். வேலையை நல்லபடியா முடிச்சுட்டு நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்தாப் போதும்! - சிவா விடை கொடுத்து அனுப்பினான். 

_____________________________

டேய் சுரேஷ்! நைட்டே கொளுக்கு மலை பங்களாவுக்கு வர்றதாச் சொல்லியிருந்தோம்ல்ல? இப்போ உள்ள நிலைமைக்கு காலையில்தான் போக முடியும் போலிருக்கு. அந்த பங்களா கேர்டேக்கர்ட்ட வெவரத்த சொல்லிட்டா தேவலையே. பாவம் நமக்காக காத்துட்டு இருப்பாரு! - சிவா தோழனிடம் சொன்னான்.

செல் ஃபோனை எடுத்த சுரேஷ் உதட்டைப் பிதுக்கினான். ''நோ சிக்னல்! காடு ஆரம்பிக்கப் போகுது. இங்க வீடுகளும் அதிகம் இல்லே. எந்த நெட்வர்க்கும் சிக்னல் குடுக்க மெனக்கெட மாட்டான். இப்போ என்ன பண்ணலாம் சிவா!

அதோ ஒரு ஒத்தை பங்களா தெரியுது பாரு! அதில் லேன்ட்லைன் இருக்கலாம். அவங்ககிட்ட நிலைமையைச் சொல்லி ஒரு ஃபோன் பண்ணிக்கலாம். அதோட அவங்க வராந்தாவில் ஷெல்ட்டரும் கேட்டுப் பார்க்கலாம். பொம்பளப் புள்ளைகளை பத்திரமா ராத்தங்க வைக்கணும் சுரேஷ்!

அப்படியே செய்வோம்!

டேய் கணேஷ்! யாருக்கு என்ன வேணும்ன்னு கேட்டுக்கோ. நீதான் ஒத்தை நாடி ஆளு. வண்டியை ஆட்டாம உள்ள போயி, அவங்க பேக்கேஜ்லருந்து எடுத்துட்டு வா! சீக்கிரம்!

பின்னர் மாணவர்களின் அந்த ஊர்வலம் தூரத்தில் தெரிந்த சிறு மாளிகையை நோக்கி முன்னேறியது!

_____________________________


குட்டி யானையின் பின்னால் நின்றவாறு அல்லி நகரத்தை நோக்கி கிட்டாவும் போண்டாவும் சென்றுகொண்டிருந்தனர். தன் முதலாளியின் முகம் மிகவும் வாடி இருப்பதை அந்த இருளிலும் போண்டாவால் உணர முடிந்தது. மாணவர்களின் ஏளனப் பேச்சு இவரைக் காயப்படுத்தியிருக்குமோ? இருக்காதே.. எப்போ ட்ரைவர் வேலைக்கு வந்துட்டோமோ அப்போவே, மத்தவங்க ஏச்சுப் பேச்சை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடணும். மனசுக்குள் எதையும் இறக்கிக்கிட்டு கஷ்டப்படக் கூடாதுன்னு சொல்பவராச்சே! அப்புறம் ஏன் இப்படி அப்செட் ஆகி நிக்கறார்?

ஏண்ணே என்னமோபோல இருக்கே?

ப்ச்ச்ச்! ஒன்னுமில்லடா!

இல்லண்ணே! என்னவோ இருக்கு. எவ்ளவோ கஷ்டப்பட்டிருக்கோம். வண்டி மோசமா ரிப்பேர் ஆகி நின்னதும் உண்டு. சவாரிக்காரங்க நம்மள அடிக்க வந்ததுகூட நடந்திருக்கு. அப்பல்லாம் போடா போடா புண்ணாக்குங்கற மாதிரி அசால்ட்டா நிப்பே. இப்போ நீ என்னத்தையோ உள்ளுக்குள்ளயே வச்சுக்கிட்டு தவிக்கிறே. அது என்னன்னு என்கிட்டக்கூட சொல்லக்கூடாதா?

இல்லடா போண்டா! என் மனசுல உள்ளதையெல்லாம் இப்போவே உன் கால்ல உழுந்து சொல்லி அழுதிருப்பேன். வயசுல சின்னவனாப் போயிட்டே. என்னை ஒன்னும் கேட்காதே! என் மனப் போராட்டத்தை யார்கிட்டயாவது சொல்ற நேரம் நிச்சயம் வரும். அப்போ உன்கிட்டதான் முதல்ல சொல்லுவேன். அதுவரைக்கும் அண்ணனை எதுவும் கேட்காதே.

_____________________________

டேய் கணேஷ்.. வண்டியை நல்லாப் பூட்டிட்டியா?

ஆச்சு சிவா!

பங்களால லைட் எரியறாப்பலதான் இருக்கு. இன்னும் அவங்க தூங்கல போல. - வாசல் காம்பவுண்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். போர்ட்டிகோ விசாலமாக இருந்தது. போர்ட்டிகோவை ஒட்டி வீட்டு நுழைவாயில். வாசலிலேயே விசிட்டர்களுக்காக பெஞ்ச்சுகள் நீளமாகப் போடப்பட்டிருந்தன.

இந்த பெஞ்சுலயே பட்டறையைப் போட்டுறலாம் சிவா. வீணா வீட்டுக்காரங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே!

எதா இருந்தாலும் அவங்க அனுமதி கேட்டுட்டுதான் செய்யணும். கேட்டைத் திறந்துட்டு போர்ட்டிகோ வரைக்கும் வந்ததே தப்பு. இரு. காலிங் பெல் ஸ்விட்ச் இருக்கான்னு பார்க்கறேன். - சிவா ஸ்விட்ச்சைத் தேடும்போது அந்த பெயர்ப்பலகை கண்ணில் பட்டது.

டாக்டர். ஷண்முகமணி.

வாசலில் கிடந்த நீண்ட பெஞ்ச்சுகளுக்கான காரணம் ஒருவழியாகப் புரிந்தது. என்றாலும் இந்தப் பலகைகளில் ஆட்கள் அமர்ந்து வெகுகாலம் ஆகியிருக்கும் போலிருக்கிறதே என்ற ஐயமும் சிவாவுக்கு வந்தது. அதைப் புறந்தள்ளிவிட்டு, அழைப்பு மணியை அழுத்தினான். சற்றுநேரத்தில் உள்ளிருந்து ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்.

வயது 40க்கு மேல் இருக்கலாம். முழு ஒப்பனையில் இருந்தாள். பேச்சும் நடவடிக்கையும் வித்தியாசமாக இருந்தன. அத்தனை பேர் நின்றிருந்தும் எவர் முகத்தையும் பாராமல் சூனியத்தில் விழிகளை நிலைகுத்தவிட்டு, கை கூப்பி வணங்கி அழைத்தாள்... 'எல்லோருக்கும் வணக்கம். உள்ள வாங்க!' சொல்லிவிட்டு சரட்டென்று உள்ளே திரும்பி நடந்தாள். அவளது நடக்கும் உடலசைவில் எவ்வித குலுங்கல்களோ அதிர்வுகளோ இல்லை. அலுங்காமல் காற்றில் மிதப்பவள் போல போய்க்கொண்டிருந்தாள்.

என்னடா இந்தம்மா? யாரு என்னன்னுகூட கேட்காம உள்ளே கூப்பிடுது! எதுக்கும் யோசிச்சு செய் சிவா! எனக்கு என்னவோ வினோதமாப் படுது. இந்த பங்களா அட்மாஸ்ஃபியரும் பயத்தைக் கொடுக்குது. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் வேற வீடுகளும் இல்லே. உதவிக்குக்கூட யாரும் வரமாட்டாங்க போலருக்கு. - சுரேஷ் தன் எண்ணத்தை வெளியிட்டான்.

கண்ணுக்கு எட்டுன வரைக்கும் வீடு இல்லேன்னு சொல்றேல்ல? இத்தனப் பொம்பளப் புள்ளைகளை ரோட்டுல வச்சுக்கிட்டு இந்த ராத்திரியில நாம நிக்க முடியுமா? வர்றதைச் சமாளிப்போம். வா சுரேஷ்!

இந்தப் பாதி ராத்திரியில இந்தம்மா ஏண்டா இவ்ளோ பகுடரை ஏத்தியிருக்கு? இப்படிப் பர்சனாலிட்டியை லோட் பண்ணிக்கிட்டு எங்க கிளம்பப்போகுது? - கணேஷ் குழறலாகக் கேட்டான்.

இந்தம்மா அலங்காரத்தைப் பார்த்தா ரெம்ப வருசத்துக்கு முந்தியதை மாதிரி இருக்கு சிவா! - ஷாலினியும் மொழிந்தாள்.

உள்ளே போன வீட்டுக்காரப் பெண்மணி நீண்ட ஹாலின் கோடியில் நின்றாள். உடலைத் திருப்பாமல் தலையை மட்டும் கூடியவரை பின்பக்கம் திருப்பியவாறு குரல் கொடுத்தாள். ''உள்ளே வாங்கன்னு சொன்னேனே!'' - அவள் குரலில் இருப்பது உபசரிப்பா, அதிகாரமா என்று எவருக்கும் புரியவில்லை. பலியாடுகள் போல ஒவ்வொருவராக தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். தங்களுக்குப் பின்னால், வீட்டின் வாயிற்கதவு சத்தமின்றித் தானே அடைத்துக்கொள்வதை அவர்கள் கவனிக்கவில்லை.

STORY WRITER'S CONTACT No. 9842XXX6XX

Comments

Popular posts from this blog