சித்ரா' வதை - 7



 டேய் மாப்ள.. அது மினி இல்லடா.. முனி! - அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்துக் கத்தினான் கணேஷ்!

காதில் வந்து ஏண்டா கத்தறே சனியனே! ஏற்கனவே எனக்கு பேதி புடுங்குது. நீ வேற பீதியைக் கிளப்பாதே! - கருணாஸ் நடுக்கத்துடனேயே சொன்னான்.

ஸ்ஸ்ஸ் சும்மா இருங்கடா! டாக்டர் சார்! ப்ளீஸ்..சொல்லுங்க.. நாங்க பார்த்தது உங்க மிசஸோட ஸ்தூல சரீரமா? நீங்க சொல்றது உண்மையா? - சிவா தணிவாக வினவினான்.

லுக் யங் மேன்! நான் இதுக்கு முந்தி உங்களை எல்லாம் பார்த்தது இல்லே! இனி எதிர்காலத்தில் சந்திப்பேனாங்கறதும் நிச்சயம் இல்லே! நான் எதுக்கு உங்ககிட்ட பொய் சொல்லணும்? அஃப்கோர்ஸ், இதுவரைக்கும் நான் மினியைப் பார்த்ததில்லே. ஆனா வீட்டு வேலைக்காரம்மா, செக்யுரிட்டி இவங்க கண்ணில் பட்டிருக்கா. அவ யாரையும் எதுவும் பண்ணதில்லே. இருந்தாலும் இப்போ யாரும் வேலைக்கு வர்றதில்லே! - கண்ணாடியைக் கழற்றித் துடைத்தவாறே சொன்னார் டாக்டர் ஷண்முக மணி!

அய்யோ மாப்ள! அந்த அம்மாட்ட ஓவரா ஒரண்டை இழுத்து வச்சிருக்கேண்டா. வந்துச்சுன்னா என்னைத்தான் முதல்ல நாலு அப்பு அப்பும். என் சோலி முடிஞ்சுடும்டா மாப்பு. நல்லாருப்பே! என்னை எப்படியாவது இங்கேருந்து கடத்தி வுட்டுடுடா! உன்னோட இன்னொரு வெரலுக்கு கோவில் கட்டிக் கும்பிடறேன். உன் வம்முசத்துக்கே செருப்பாக் கிடப்பேன் மாப்ள.. என்னக் காப்பாத்து! - கண்ணீருடன் கதறினான் கணேஷ். பெண்களிடமிருந்து செருமல்கள் எழத் தொடங்கின.

என் இன்னோரு வெரலுக்கு கோவிலக் கட்டிட்டியன்னா அப்புறம் எங்கேருந்துடா வம்முசம் வளரும்? முதல்ல என் இடுப்ப விட்டு கீழ எறங்கு!

இல்ல மாப்ள.. நான் கால கீழ வைக்க மாட்டேன். அந்த டான்ஸ்க்காரம்மா முதலையாக்கூட வந்து காலைக் கவ்வும்! - கருணாஸின் இடுப்பைச் சுற்றி இன்னும் நன்றாக காலைப் பின்னிக்கொண்டான் கணேஷ்.

காலக் கெரகம்டா! - கணேஷைச் சுமந்தவாறே கதவை நோக்கிப் போனான் கருணாஸ். எவ்வளவோ முயன்றும் வாசல் கதவை அவனால் திறக்க முடியவில்லை!

என்னா மாப்ள.. கதவுக்கு பேனு பாக்கற? சட்டுன்னு தொறடா.. கழிச்சல்ல போறவனே!

திறக்க முடியலடா மூதேவி!

என்னாது? தெறக்க வரலியா? அம்மா பேச்சியாயி.. உன் புள்ளையக் காப்பாத்தும்மா! ஆயுசு பூரா மொட்டை போட்டுக்கறேன்! எதையும் அனுபவிக்காமப் போறேனே.. எடி ஆர்த்தி குந்தாணி.. அங்க என்னாடி பண்றே? இங்க வாடி! - கணேஷின் பிலாக்கணம் அதிகரித்தது. பெண்களிடையே இலேசாக அலறல் கேட்கவும் ஆரம்பித்தது.

டோன்ட் க்ரியேட் சீன்ஸ்! தள்ளுங்க.. நான் திறக்கறேன். - டாக்டர் முன்வந்தார். பெண்கள் எல்லோரும் அவர் பின்னாலேயே ஓடிவந்தனர். அவர் முயற்சியும் தோல்விதான். டாக்டர் முகத்தில் பிரேதக்களை அரும்ப ஆரம்பித்தது.

டாக்டர்! எங்களை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்! - அவர் கைகளைப் பிடித்தவாறு ராதிகா அழ ஆரம்பித்தாள்.

டோன்ட் பி பேனிக் ராதிகா! குளிர்காலத்தில் கதவுகள் ஜாம் ஆகறது வழக்கம்தான்! டாக்டர்.. இந்த வீட்டுக்கு வேற ஏதும் வாசல் இருக்கா? - சிவா இன்னும் தன்னிலை இழக்கவில்லை. உறுதியாக இருந்தான்.

இருக்கு! பின்பக்கம் ஒரு வாசல் இருக்கு! ஆனா ட்ரபுள் என்னன்னா.. வேலைக்காரி, செக்யூரிட்டி இவங்கல்லாம் என் மினியைப் பார்த்தது கொல்லைப் பக்கத்தில்தான்! இந்த நேரத்தில் அந்தப்பக்கம் போறது சரியான்னு ஒரு யோசனை! - டாக்டர் தயங்கியவாறே சொன்னார்.

பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் நடுங்கத் துவங்கினர். இந்த நேரத்தில் மின் விளக்குகளும் அணைந்து போயின. மாணவர்களின் அலறல் அதிகரித்தது. ராதிகாவின் குரல்தான் உச்சத்தில் இருந்தது. மாணவர்கள் தங்கள் அலைபேசி விளக்கை உயிர்ப்பித்தனர். அந்த வெளிச்சத்தில் ஒவ்வொருவர் முகமும் பீதிக்குள்ளாகி இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

டாக்டர்! இப்போ என செய்யறது?

யோசிப்போம்! ப்ளீஸ் வெயிட்! - டாக்டர் சிந்தனையுடன் சொல்லிக்கொண்டிருக்கையில், சித்ராவின் குரல் ஸ்பஷ்டமாக ஒலித்தது.. '' எனஃப் டாக்டர்! திஸ் ஈஸ் த லிமிட். உங்க வேடிக்கையை இத்தோட முடிச்சுக்குங்க. எதுக்கும் ஒரு அளவு இருக்கு!''

ஹூ இஸ் தட்? வாட் நான்சென்ஸ் யு அர் டாக்கிங்? - டாக்டர் சீறினார்.

இட்ஸ் மி! சித்ரா! அம் நாட் டாக்கிங் நான்சென்ஸ். நீங்க செய்துகிட்டு இருக்கறதுதான் நான்சென்ஸ்! - சித்ரா அசராமல் அடித்தாள்.

என்ன சித்ரா? நீ கூட இந்த நேரத்தில் பொறுப்பில்லாமல் பேசலாமா? - சிவா இலேசாகக் கடிந்துகொண்டான்.

டீ முட்டாள் சித்ரா! உனக்கென்ன பைத்தியமா? இப்போ நமக்கு ஹெல்ப் பண்ண முடிஞ்சவர் டாக்டர் ஒர்த்தர்தான்! அவரைக் கோபத்துக்கு ஆளாக்காதே! எப்போதும் ஊமக்கோட்டான் மாதிரி இருப்பே. இப்போ என்ன வாய் கிழியுது? - ராதிகா வெடித்தாள்.

இந்த அவமானத்தை நான் பொறுக்க மாட்டேன். என் வீட்டில் என்னையே தரக்குறைவாக பேசியது பெரும் தவறு. எல்லோரும் மன்னிப்பு கேட்கணும். அதும் அந்த சோ கால்ட் சித்ரா என் காலில் விழுந்து எக்ஸ்க்யூஸ் கேட்கணும். இல்லாட்டா யு ஆல் ஹேவ் டு ஃபேஸ் கன்சிக்வன்ஸஸ்! - டாக்டர் எச்சரித்தார்.

சித்ரா.. மன்னிப்பு கேட்டுடு! ப்ளீஸ் - அனிதா கிசுகிசுத்தாள்.

நாங்க சொல்ல வேண்டியதை நீங்க சொல்லிட்டு இருக்கிங்க டாக்டர் சார்! கதவுக்கு வெளியே நிக்கற உங்க கவுன்டர்பார்ட்டை மெயின்ஸ் ஆன் பண்ணச் சொல்லுங்க. இல்லாட்டா, அடைக்கலம் தேடி வந்த அப்பாவி மாணவர்களை அளவுக்கு மீறி ப்ராங்க் பண்ணினதா உங்க மேல புகார் கொடுக்க வேண்டி வரும்! - சித்ரா எச்சரித்தாள். மாணவர்களின் எரிச்சலும், நிந்தனையும் சித்ராமீது அதிகரித்தது.

யங் லேடி.. என்ன உளர்றே? - டாக்டர் கத்தினார்.

நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியவே இல்லியா டாக்டர்? சரி.. உங்களுக்குப் புரியற மாதிரி ரெண்டே வார்த்தையில் சொல்லவா? WRITE SPIRIT! - கடைசியாக சித்ரா உச்சரித்த ஆங்கிலச் சொற்கள், டாக்டரை அரள வைத்தன. திகைத்து நின்றார்.

இது.. இது.. எப்படி உனக்குத் தெரியும்? - டாக்டர் திணறியவாறே கேட்டார்.

முதல்ல இந்த லோக்கல் பவர் கட்டை நீக்குங்க. பிறகு எல்லாம் விவரமாப் பேசலாம்!

ராம் சிங்! மெயின்ஸ் ஆன் கரோ பாய்! - டாக்டரின் உத்தரவுக்குப் பிறகு பங்களா ஒளிவெள்ளத்தில் மின்னத் தொடங்கியது. மாணவர்கள் முகத்தில் பயம் விலகியிருந்தாலும் குழப்பம் குறைந்தபாடில்லை! ''இங்கே என்னதான் நடக்கிறது? - எல்லோர் மனதிலும் இந்தக் கேள்விதான்!

சித்து.. என்னடி இதெல்லாம்? - அனிதா வாய் விட்டே கேட்டுவிட்டாள்.

என்னவோ விவரமா சொல்றேன்னு சொன்னியே? சொல்லும்மா! உனக்கு எவ்ளோ விஷயம் தெரியும்ன்னு நானும் தெரிஞ்சுக்கறேன்! - டாக்டர் முகத்தில் கோபம் இல்லை; ஆர்வம் மட்டும் இருந்தது.

சொல்றேன் டாக்டர்! அதுக்கு முந்தி எங்க மாணவர்களை வச்சு நீங்க ஒரு கேண்டிட் ப்ராங்க் ஷோ நடத்தினதுக்காக மன்னிப்புக் கேளுங்க! - புன்னகையுடன் சொன்னாள் சித்ரா!

நோ ப்ராப்ஸ்! ஆனா உனக்கு எவ்ளோ தூரம் விஷயம் தெரியும்ன்னு நான் தெரிஞ்சுக்கணுமில்லே! சும்மா ஃப்ளூக்ல அடிச்சு விட்டுருந்தீன்னா எனக்கு ஒரு மன்னிப்பு வேஸ்ட் ஆயிடுமே! - டாக்டர் விளையாட்டாகவே சொன்னார்.

டீ! என்னாச்சுன்னு சொல்லுடி. எங்களுக்கும் க்யூரியஸா இருக்கு! - அனிதா ஊக்கினாள்.

ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லேடி! நீங்க நினைச்சுட்டு இருக்கறாப்ல இவர் ஒன்னும் வைத்தியம் பார்க்கற டாக்டர் இல்லே! ஆவிகள் குறித்து ஆராய்ச்சி பண்ற பி எச்டி முனைவர். இவரோட விடியோஸ் யு ட்யூப்ல பார்த்திருக்கேன்! - சித்ரா சொல்ல ஆரம்பித்தாள்.

வெயிட் மை டியர் யங் லேடி! உனக்கு எல்லாம் தெரியும்ன்னு ஒத்துக்கறேன். மிச்ச விஷயத்தை எல்லாம் கேமராவுக்கு முன்னாடி சொல்லு. உங்க கேண்டிட் ஷோவோட உன் விளக்கத்தையும் யு ட்யூப்ல போட்டு மன்னிப்பு கேட்கறேன். விடியோ தலைப்புகூட ரெடி! ''ஹவ் அ யங் லேடி பஸ்டெட் அவர் ப்ராஜெக்ட்!'' கொஞ்சம் இரு! - சொன்ன டாக்டர் மாடிப்பக்கம் அண்ணாந்து குரல் எழுப்பினார். ''கனி! மை டியர் சன்!''

யெஸ் டாட்! - மேலிருந்து பதில் வந்தது.

கொஞ்சம் உன் ஹேன்டி கேம் எடுத்துட்டு கீழ வாப்பா!

பாவம்! உங்க மிசஸையும் கூப்பிடலாமே டாக்டர்! அவங்க எவ்ளோ நேரம் கப் போர்டுக்குள்ளயோ, கிச்சன் கேபினட்டுக்குள்ளேயே ஒளிஞ்சிருப்பாங்க? - சித்ரா சிரித்தவாறே வினவினாள்.

வெல் செய்ட் சித்ரா! மினி.. மை டார்லிங்! ப்ளீஸ் கம் அவ்ட் டியர்!

அய்யய்யோ! விடியோ கோச் வரப்போவுதுடா! - கணேஷ் பதறினான். சவுதாமினி
சிரித்தவாறே சமையலறையில் இருந்து வந்தாள்.

சாரி பாய்ஸ்.. அன்ட் கேர்ள்ஸ்.. கொஞ்சம் ஓவராத்தான் விளையாடிட்டோம்! - புன்னகையுடன் மன்னிப்பு வேண்டிய சவுதாமினியிடம் எவ்வித செயற்கைத்தனமான மேனரிசங்களும் இல்லை. ''ஹூ ஈஸ் சித்ரா? த ப்ரேவ் அன்ட் ஸ்மார்ட் கேர்ள்? எனக்கு அறிமுகம் பண்ணி வைங்க ப்ளீஸ்!

அறிமுகம் முடியவும் மாடியில் இருந்து டாக்டர் தம்பதியின் பையன் கேமராவுடன் வரவும் சரியாக இருந்தது.

ஃப்ரென்ட்ஸ்! இவன் எங்க பையன் சமுத்ரக்கனி! ஷார்ட்டா கனின்னு கூப்பிடுவோம். விஷ் காம் படிச்சிருக்கான். - டாக்டர் அறிமுகப்படுத்தினார்.

மணிக்கும், மினிக்கும் பிறந்த கனியா இவரு? - கணேஷ் விசாரித்தான்.

டேய் நரம்புப்பயலே! இங்க எல்லாரையும் அலறவிட்டதுக்கு உன் வாயும் ஒரு காரணம். கொஞ்ச நஞ்சப் பேச்சா பேசினே? - கணேஷ் தலையில் செல்லமாகக் குட்டினாள் சவுதாமினி.

கனி கேமரா செட் செய்து தயாராக, சித்ராவைப் பேசும்படி டாக்டர் கேட்டுக் கொண்டார்.

கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு ரெஃபரன்சுக்காக யு ட்யூபைக் குடைஞ்சுகிட்டு இருக்கும்போது உங்க ''WRITE SPIRIT'' சானல் தட்டுப்பட்டது. இதுபோல ஒரு கல்யாண மண்டபத்தில் சில பேரை பயமுறுத்தி ஒரு விடியோ எடுத்துப் போட்டுருந்தீங்க. ஆனா அப்போ நான் வேற ஒரு விஷயத்தைத் தேடிட்டு இருந்ததால இந்த விடியோவை முழுசா பார்க்காம ஸ்கிப் பண்ணிட்டேன். ஆனா உங்க சானல் பேரு மட்டும் வித்தியாசமா இருந்ததால் மனசுல தங்கிடுச்சு.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதுபோல ப்ராங்க் விடியோ எடுப்பீங்கன்னு நினைக்கிறேன். எங்க வேன், பங்ச்சர் ஆகறதைப் பார்த்திருப்பீங்க. ஒருவேளை இரவு தங்கறதுக்கு நாங்க இங்கே வரலாம்ன்னு எதிர்பார்த்து தயாரா இருந்தீங்க. ஒங்க குடும்பம், செக்யுரிட்டி எல்லாரும் ஒரு சின்ன ரிகர்சல் பண்ணிட்டு எங்களுக்காக காத்திருந்தீங்க. நாங்களும் வந்து வகையா மாட்டினோம். சரியா?

கரெக்ட்தான் சித்ரா. மேல சொல்லு!

டாக்டர். ஷண்முக மணிங்கற பேரைப் பார்த்ததும் எனக்குள்ள சின்ன ஸ்பார்க். இந்தப் பேரை எங்கேயோ பார்த்திருக்கோமேன்னு. ஆனா சட்டுன்னு நினைப்பு வரல. உங்க மிசஸோட மேனரிசங்களில் மனசும் புத்தியும் போயிடுச்சு. வேற எதையும் நாங்க சிந்திக்கக்கூடாதுன்னுதான் அப்படி ஒரு சேட்டைகளை பண்ணினாங்கன்னு இப்போதான் புரியுது.

மதியம் வச்ச மீன் குழம்பு இருக்குன்னு சொன்னப்போ மீன் முத்திரை காட்டி அபிநயம் பிடிச்சாங்க. ஆனா ஆக்ச்சுவலா அது மத்ஸ்ய முத்திரை இல்லே. வராக முத்திரை. ரெண்டுக்கும் சின்னச் சின்ன வித்தியாசம் இருக்கு! பொழுதுபோக்குக்கு ஆடறவங்களுக்கு அது தெரியாது. ஆனா 10 வருஷத்துக்கு மேல முறைப்படி நடனம் கத்துட்டவங்கன்னு டாக்டர் சார் சொல்லும்போது எனக்கு சந்தேகம் வந்துச்சு! முறைப்படி கத்துட்டு நிகழ்ச்சி நடத்தறவங்க மீன் முத்திரைக்கு பன்றி வடிவத்தைக் காட்ட மாட்டாங்களேன்னு நினைச்சேன்.

உனக்கு பரதநாட்டியம் தெரியுமா சித்ரா? - ஆவலோடு வினவினாள் மினி.

எங்க சித்துவுக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் அத்துப்படி! - அனிதா பெருமையுடன் சொன்னாள்.

கொஞ்சம் இரு அனி! சொல்லவந்ததை முடிச்சுடறேன். அப்புறம் டாக்டர் சார்கூட ஒரு சின்னத் தப்பு பண்ணிட்டார். முதன்முதல்ல எங்களைப் பார்த்தப்போ கோபமா கத்தினார். தன்னோட நாலெட்ஜ் இல்லாம வீட்டுக்குள் இத்தனை பேர் அதுவும் இந்த நேரத்தில் வந்து நிக்கறாங்கன்னா எந்த ஒரு மனுஷனுக்கும் கலவரமோ, பயமோதான் வரும். கோபம் வராது. அவர் ரூமைத் திறந்துட்டு வந்த உடனே எங்க மேல கோபப்பட்டு பேசினார். என்னதான் தைரியசாலின்னாலும் ரெக்கவர் ஆக கொஞ்ச நேரம் பிடிக்கும். ஆனா டாக்டர் அப்படி டைம் எடுத்துக்கலே. இந்த நாடகத்தை முன்கூட்டியே தெரிஞ்சவங்களுக்குதான் அப்படி கோபமா ரி ஆக்ட் பண்ண முடியும். சரியா டாக்டர் சார்?

கரெக்ட்தான்! அந்த இடத்தில் கோட்டை விட்டுட்டேன். சீன் படி நான் மட்டும் தனியா இருக்கற வீடு. அப்போ கோபம் வந்திருக்கக்கூடாது. பயம், தயக்கத்தோட வந்துதான் நான் விசாரிச்சிருக்கணும். அம் ஃபுல்லி அக்ரி வித் யு சித்ரா.

இந்த சந்தேகங்கள் எனக்கு உருவானதால, இவங்க பேச்சு ரகளைல எல்லாம் மனசை விடாம சூழலை அவதானிக்க ஆரம்பிச்சேன். அடுத்தது கரண்ட் கட் ஆனப்போ, வெளிலருந்து மெயின்ஸ் ஆஃப் பண்ற 'க்ளிக்' சத்தம் கேட்டுச்சு. குறைஞ்சது நாலு இடத்தில் சிசி கேமரா வச்சு எங்க தவிப்பை ரெக்கார்ட் பண்ணிட்டு இருந்திருக்கீங்க. அந்த கேமராக்களோட சின்ன சிவப்பு எல் இ டி விளக்குகளையும் பார்த்தேன். அதுமட்டுமல்ல. முதன் முதலில் செல்ஃபோன் டார்ச்சை ஆன் பண்ணினதும் டாக்டர் சார்தான். அதுக்கு அப்புறம்தான் எங்க பசங்க விளக்கை பொருத்தினாங்க. இருட்டில் பசங்க துடிப்பும், அவஸ்தையும் கேமராவில் சரியா கேப்ச்சர் ஆகாதுன்னுதான் டாக்டர் சார் செல் டார்ச் போட்டு ஆரம்பிச்சு வச்சார். .

அதெல்லாம் சரிடி சித்து. இந்த வாசக்கதவு எப்படி தானா லாக் ஆனுச்சு?

வெளிலதான் ராம் சிங்ன்னு ஒருத்தர் இருக்காரே. அவர் சாத்தி வெளிப்பக்கம் தாழ் போட்டிருப்பார். அதை நாம கவனிக்காம இருக்கத்தான் மேடம் டான்ஸ் மூவ்மென்ட் காட்டினது!

சரி.. இந்த போட்டோல எப்படி டாக்டர் சார் முகமும், மேடம் முகமும் மாறி வந்துச்சு?

ஆக்ச்சுவலா அது போட்டோ இல்லே; டிஜிட்டல் போர்ட். அதை வெர்ட்டிகலா மாட்டி, அதில் டாக்டர் சார் இமேஜைப் போட்டு ஒரு போட்டோ எஃபெக்ட் கொடுத்திருந்தாங்க. நாம டாக்டர் சாரோட பேசிட்டு இருந்தப்போ ரிமோட் கண்ட்ரோல் மூலமா மேடம் படத்தை வரவழைச்சிருப்பாங்க. அது எளிதுதான்!

என்ன டார்லிங்! நம்ம முயற்சியை எல்லாம் இந்தப் பொண்ணு இவ்ளோ ஈஸியா ஊதித் தள்ளிடுச்சு?

மீனுக்கு பன்னியைக் காட்டி சொதப்பிட்டு கேள்வியா கேட்கறே?

அங்க மட்டும் என்ன வாழுதாம்? உங்களை யார் கோபப்பட்டு ஓவர் ஆக்ட் பண்ணச் சொன்னது?

இதெல்லாம் எதுக்கு சித்ரா இவங்க பண்ணி நம்மள அலற விட்டாங்க? - ஆர்த்தி அப்பாவியாகக் கேட்டாள்.

இன்னுமா புரியல? இவங்க ஒரு சேனல் வச்சிருக்காங்க. பேய் பயத்தை மக்களுக்கு ஊட்டினால் அவங்க எப்படி ரீ ஆக்ட் பண்ணுவாங்க; அழுவாங்க.. கதறுவாங்கன்னு விடியோ பண்ணி யு ட்யூப்ல போடுவாங்க. இதைப் பார்க்க நிறைய ரசிகர்கள் இருக்காங்க!

CREATOR'S PHONE NUMBER ; 9842XXX6XX

Comments

Popular posts from this blog