சித்ரா' வதை - 9


பென்லே கேசில் பங்களா, கொளுக்கு மலை..

மேலாளர் காத்தையா, விருந்தினர்களாக வந்திருக்கும் மதுரை மாணவர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறான்..

ஃப்ரெண்ட்ஸ்! இங்க 10 நாளைக்குத் தங்கப் போறீங்க. இந்த கொளுக்கு மலை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கறது பயனுள்ளதா இருக்கும். இது ஒரு மலை உச்சி ஊர். இதைத் தாண்டி எங்கும் போக வழியில்லே. திரும்ப கீழ இறங்கிதான் போகணும். இந்த ஊரின் மக்கள் தொகை ரொம்பக் கம்மி. அதனால எந்த பொருளும் அவ்ளோ சுலபமா இங்க கிடைக்காது. கீழ கொஞ்சதூரத்தில் சூரியநெல்லி'ன்னு ஒரு சின்ன ஊர் இருக்கு. அங்க சில கடைகள் இருக்கு. தேனியில் இருந்து ஒரு நாளைக்கு ரெண்டு தடவை அந்த ஊருக்கு பஸ் வந்துட்டுப் போகும்.

சாவியைக் கொடுத்தா ரூமுக்குப் போலாம். எதுக்கு மாப்ள இவன் நம்மள கூட்டி வச்சு பிரசங்கம் பண்றான்?

அவந்தான் சொன்னானே! இங்க ஆளுக கம்மின்னு. புதுசா ஆளுகளைப் பார்த்ததும் வாயாரப் பேசறான் போல. கம்முன்னு இரு கணேசா. என்ன சொல்றான்னு கேப்போம்!

அந்த பஸ் வர்ற நேரத்தை அனுசரிச்சு இங்கேருந்து ஒரு ஜீப் கிளம்பும். சின்னையாங்கறவன் ஓட்டறான். வெளியூர் போற ஆளுகளை சூரியநெல்லிக்கு அழச்சுட்டுப் போய் பஸ் ஏத்தி வுடுவான். வரும்போது, பஸ்ல வந்து எறங்குன ஆளுகளை அழச்சுட்டு வருவான். உங்களுக்கு ஏதும் பொருள் தேவைப்பட்டா, சீட்டும் பணமும் ஜீப் சின்னையாகிட்ட கொடுத்து விடுங்க. வரும்போது சூரியநெல்லி கடைகளில் வாங்கிட்டு வருவான்!

அங்கேயும் கிடைக்கலன்னா?

அந்த சீட்டையும் பணத்தையும் தேனி பஸ் ட்ரைவர்ட்ட சின்னையா கொடுத்துடுவான். அவர் அடுத்த சிங்கிள் சூரியநெல்லிக்கு வரும்போது தேனில வாங்கிட்டு வருவார். சாயந்தரம் கீழ போயிட்டு வரச்ச சின்னையா கொண்டுவந்து தருவான். இப்படித்தான் இந்த ஊர் ஆளுக பண்ணிட்டு இருக்காக!

நல்ல செட்டப்! இல்லடா கணேசா? ஆத்திரம் அவசரத்துக்கு இங்க எதுவுமே கிடையாதா?

பொன்னையான்னு ஒருத்தன் இங்க பொட்டிக்கடை வச்சிருக்கான். பொட்டிக்கடை, மளிகைக்கடை, டீக்கடை எல்லாம் சேர்ந்த ஒரு கடை அது! வீட்டுலயே வச்சிருக்கான்.

அதில் நமக்குத் தேவைப்பட்டதை வாங்கிக்கலாமா?

ம்ஹூம்.. அவன்கிட்ட இருக்குறதுல உங்களுக்கு எதும் தேவையா இருந்தா வாங்கிக்கலாம்! - உதவியாளன் கருப்பு விளக்கம் அளித்தான்.

இந்த வீணாப்போன வெங்காயம் என்ன சொல்றான் மாப்ள?

எனக்கும் புரியல. இரு கேப்போம்! கருப்பு சார்.. கொஞ்சம் வெவரமா சொல்லுங்களேன்!

சொல்றேன்! இப்போ நீங்க ஃபில்டர் சிகரட் கேட்டிங்கன்னா பொட்டிக்கடை பொன்னையாகிட்ட இருக்காது! காஜா பீடி இருக்கும்பான். வேணும்ன்னா வாங்கிக்கலாம்; அப்புறம் ஒரு குட் நியூஸ்! உங்களுக்கு சாயந்தர ஸ்னாக்ஸ், டீ சப்ளை பண்ணறதுக்கு பொன்னையாகிட்டதான் ஒப்பந்தம் போட்டிருக்கோம்!

ம்க்கும்! பெரிய பில்லியன் டாலர் டை அப் போட்டுருக்கானுக.. பெருமையப் பாரு! என்னடா மாப்ள.. டர்ரியலக் கிளப்பறானுக! பஜ்ஜி கொண்டாந்தா பிச்சிப் பார்த்து தின்னுடா.. பூரானை புடிச்சு போட்டிருக்கப் போறானுக..

உங்க ப்ரெண்ட் என்ன சொல்றாரு சார்? - கருணாஸை வினவினான் காத்து!

இல்லே.. இங்கே எல்லார் பேருக்கும் பின்னாடி ஐயான்னு ஒரு அடைமொழி ஒட்டியிருக்கேன்னு கணேசய்யா கேக்குறாப்டி! ஜீப் சின்னையா.. பொட்டிக்கடை பொன்னையா.. நீங்க காத்தையா..

என் பேருகூட கருப்பையா! - உதவியாளன் பதில் சொல்ல முன்வந்தான். ''ஆம்பள ஆளுகளுக்கு ஐயான்னு சேரும். பொம்பள ஆளுக பேரு அம்மான்னு முடியும்! இப்போ பாருங்களேன். உங்களுக்கு பால் ஊத்தப்போற பொண்ணு பேரு வஞ்சியம்மா. படையல் போடற பொம்பள ஆளுக பேரு முத்தம்மா, செல்லம்மா!

யோவ்! என்னய்யா பீதியக் கெளப்பறே? மாப்ள.. அவன் வாயை மூடச் சொல்லு. இல்லன்னா அவன் வாயிலயே மிதிப்பேன்!

டேய் கருப்பு! புரியறாப்பல சொல்லணும்டா! - மேலாளர் காத்தையா விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்! ''கோச்சுக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்! உங்க பக்கத்து பேச்சு வழக்கு வேற. இங்க உள்ளவுக நடைமுறை வேற. தினமும் காலை காப்பி, ராத்திரி பாதாம் பால் மெனு லிஸ்ட்ல இருக்கு. அதுக்கு தேவையான பால் கொண்டு வந்து தர்ற புள்ளை பேரு வஞ்சியம்மா. மத்தபடி, காலைப் பலகாரம், மதிய உணவு, ராத்திரி டிஃபன் இதெல்லாம் தயார் பண்ணப் போறவங்கதான் முத்தம்மாவும், செல்லம்மாவும். அதைச் சொல்றான். இங்க மசாலா அறவை எல்லாம் அம்மிலதான். உரல் இடியல்தான். அந்த டேஸ்டை அனுபவிச்சுப் பாருங்க. உசுர விட்டுருவீங்க!

'என்ன சொல்லிட்டு இவன் ஒளர்றான்' டைப் பாண புத்திரனா இருப்பாய்ங்க போல மாப்ள. ஒருத்தன் வாயிலயாவது நல்ல வார்த்தை வருதா பாரு! உசுர விட்டுருவோமாம். இந்த தரித்திரம் புடிச்சவனுகட்ட முதல்ல சாவிய வாங்குடா.. போய்த் தொலைவோம்! அய்யய்யோ.. ஒட்டுவார் ஒட்டி மாதிரி இந்த வியாதி என்னையும் புடிச்சுக்கும் போலருக்கு மாப்ள!

அப்புறம் ப்ரெண்ட்ஸ்! ஐயான்னு சொன்னதும் இது நினைவுக்கு வந்துச்சு! இந்த ஊர் காவல் தெய்வம் பேருகூட கொழுக்கையாதான். அவர் பேர்லதான் இந்த ஊரும் இருக்கு!

கொழுக்கையாவா?

ஆமாம் ஃப்ரெண்ட்ஸ்! அவருக்கும் உங்க மதுரைக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கு!

போச்சு! ஸ்பீக்கர் வாயன் சிடியைப் போட்டு பாடப் போறான். இப்போதைக்கு நிறுத்த மாட்டானே!

சும்மார்றா! நீங்க சொல்லுங்க ஜி!

650 வருசத்துக்கு முந்தி உங்க ஊர் மதுரையை கியாசுத்தீன் முகம்மது தம்கானின்னு ஒரு கொடுங்கோலன் ஆட்சி பண்ணிட்டு வந்தான். துக்ளக் வம்சம். அவனோட அரக்கத்தனத்துக்கு ஒரு சம்பவம் சொல்லுவாங்க. வீர வல்லாளங்கற நம்ம ராசாவை போர்ல செயிச்சான் அந்த கியாசுத்தீன். அந்த வல்லாளன் தோலை உரிச்சு அதுக்குள்ள வைக்கோலைத் திணிச்சு, கோட்டை வாசலில் தொங்கவிட்ட கொடுமைக்கார பாவி அவன்.

படிச்சிருக்கோம் ஜி!

அந்த பாவிப்பய ஒருநாள் எங்க ஊர்ல வந்து ஓய்வுக்காக தங்கியிருந்தான். ராத்திரித் தேவைக்காக எங்க ஊர் பொண்ணுக ஏழெட்டு பேரை அந்த கியாசுத்தீன் பட்டாளம் கட்டி இழுத்துட்டுப் போயிருச்சு. எதிர்த்தவங்களை வெட்டிப் போட்டுருச்சு. அப்போ இந்த கொழுக்கையா ஊர்க்காவல் பார்த்துட்டு வராரு. எங்க ஊர் தலையாரியா இருந்தவர்.  புள்ளைங்கள விட்டுருங்கன்னு சொன்னாரு. அவனுக கேக்கல..

அப்புறம்..?

அந்தக் கதையை இப்போவும் எங்க ஊர்ல கொளுக்கையா கொலைச் சிந்துன்னு பாடுவாக. பட்டாளம் நூறு பேரு. கொழுக்கையா தனி ஆளு. கையில் இருந்த கட்டாரியால எதிர்த்தவங்க தலையெல்லாம் சீவித் தள்ளுறாரு. இருந்தாலும் நூறு பேருட்ட ஒத்தை ஆளு என்ன பண்ண முடியும்.? 17 பட்டாளத்தான் தலையை உருட்டிட்டாரு. இவரை சமாளிக்க முடியாதுன்னு கியாசுத்தீன் பட்டாளத்துக்கு தெரிஞ்சு போச்சு. எட்டி நின்னு அம்பு எறிஞ்சு கொளுக்கையாவைக் கொன்னுட்டானுக பாவிக.. இந்தக் கட்டத்த எங்க கோடாங்கி பாடுவாரு பாருங்க..

சைத்தான் சைனியம் நூறு பேரு;
சங்காரக் கொளுக்கன் ஒத்தை ஆளு..
வெட்டி உருளுது மண்டை;
கொட்டி முழக்குது செண்டை!

இதப் பாடக் கேக்கையில நம்ம உடம்பு சிலிர்க்கும். பொம்பள ஆளுக அருள் வந்து ஆடுவாக..

அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்றானா பாரு மாப்ள! சரியான எடத்தில சஸ்பென்ஸ் வச்சுட்டு பில்டப் கொடுக்கறான் பாரு.

அப்புறம் என்னாச்சு ஜி?

கொழுக்கையாவும் மடிஞ்சுட்டாரு. இனி நம்ம மானத்தக் காப்பாத்த யாருமில்லன்னு பொம்பளப் புள்ளைக முடிவு பண்ணிருச்சுக. அப்படியே கட்டினக் கட்டோட கொத்தா தடாகத்தில் குதிச்சு செத்துப் போயிருச்சுக..

அடடா!

இருங்க.. கதை இதோட முடியல. பட்டாளம் கொண்டு வரப்போற பொண்ணுகளுக்காக கியாசுத்தீன் ஆசையா கூடாரத்தில் படுத்துக் கிடக்கான். அப்போ கொழுக்கையா நெருப்புப் பிழம்பா வந்து அவன் முன்னே தோன்றுனாராம். அதைப் பார்த்து மிரண்டுபோன கியாசுத்தீன் ராவோட ராவா ஊரை விட்டு ஓடிட்டான்.

கடைசியா சொன்ன ஐட்டம் புருடா! தங்களோட மன ஆறுதலுக்கு இப்படி ஒரு என்ட் கார்டு போட்டு புளகாங்கிதம் அடைஞ்சுக்கறது நம்ம வழக்கம்தான்! இல்லியா ஜி?

அவசரப்பட்டு எதுவும் சொல்லிராதீங்க! இந்த சம்பவம் நடந்தது கிபி 1344 ஆரம்பத்துல. இங்கேருந்து ஓடிப்போன கியாசுத்தீன் ஜன்னி கண்டு புலம்ப ஆரம்பிச்சுட்டான். எந்த வைத்தியம் செய்தும் அவன் பிணி தீரல. டெல்லியிலருந்து யுனானி வைத்தியர் வந்தார். மருந்து கொடுத்தார். கியாசுத்தீன் உடம்புக்கு ஒத்துக்கல. கொழுக்கட்டை கொழுக்கட்டையா உடம்பு வீங்கிப் போச்சு. துடிதுடிச்சு செத்தான். இது வரலாறு. புருடா இல்ல. அதிலிருந்து கொளுக்கையா சாமி எங்க குலதெய்வமா கொண்டாடிட்டு வரோம். எந்தத் தப்பு செய்தாலும் இந்த மண்ணில் தண்டனை உண்டு. தப்பவே முடியாது. இன்னிக்கு இல்லேன்னா நாளைக்கு.. தப்பு செய்தவன் அனுபவிச்சு சாவான். இது வேத சத்தியம்! - காத்தையாவின் குரலில் உறுதி இருந்தது. இதைக்கேட்டு சூரியா நடுங்க ஆரம்பித்தான். சரத்தின் கையை ஆறுதலுக்குப் பற்றிக்கொண்டான். கணேஷ் வாய் இறுகப் பூட்டிக்கொண்டது!

சாவி வாங்கிட்டு வா சுரேஷ்! பொண்ணுக ஆடிப் போயிருக்காங்க! - பிரபு சொன்னான்.

டேய் கருப்பு. லிஸ்ட் வாங்கிகிட்டு சாவியைக் கொடுத்து வுடு. யாராச்சும் ஒருத்தர் பொறுப்பு எடுத்துக்கிட்டு எல்லா சாவியையும் வாங்கிக்கங்க. உங்க வசதிப்படி ஷேர் பண்ணிக்கங்க. கருப்பு.. பாத்துக்கடா. நான் வெளில போயிட்டு வரேன். - காத்தையா புறப்பட்டு விட்டான். கொஞ்சநேரத்தில் ஒரு ஆட்டோ புறப்பட்டுச் செல்லும் ஓசை கேட்டது.

சரி! ஃபுல் பேமண்ட் கட்டிட்டு சாவி வாங்கிக்கங்க.. - கருப்பு பேரேட்டை எடுத்து வைத்து பெயர்களைப் பதிய ஆரம்பித்தான்.

மூணு மாசமா, எப்போ வாரீங்கன்னு உங்க மேனேஜர் என்னைக் கெஞ்சினார். இங்க வந்ததும் கறார் பேசறிங்க. ஃபுல் பேமண்ட்டும் கொடுக்கணுமா? - சரத் கேட்டான்.

அப்புறம்? நீங்க எல்லாம் பொசுக்குன்னு போயிட்டீங்கன்னா நான் யாருகிட்ட காசு கேக்க முடியும்? - தலை நிமிராமல் கருப்பு எழுதுவதில் ஈடுபட்டிருந்தான்.

அதென்னாய்யா? நாங்க என்னமோ அல்ப்பாயுசுல போற மாதிரி சொல்றே?

அட அதில்லீங்க! ஒரு வாரம் தங்குறோம்ன்னு வாராங்க. அஞ்சு நாள் குஷாலா தங்கறாங்க. வக்கணையா திங்கறாங்க. ஆறாம் நாள் காலைல சொல்லிக்காம ஓடிப் போயிடறாங்க. அப்புடி ரோக்கியனும் இருக்கான் தானே? அதுக்காகத்தான் முன்னாடி பணத்த வாங்கிக்கறது. - கருப்பு விளக்கம் சொன்னான்.

இவன் அப்போலேருந்து அச்சானியமாவே பேசறான் சுரேஷ். வாயைக் கொடுக்காதே. பணத்தக் கட்டிட்டு சாவியை வாங்கிட்டு வா!

______________________________

சரி பாய்ஸ்! ஆண்கள் தனியா, பெண்கள் தனியா தங்கிக்கலாம். யார் யாருக்கு ரூம் மேட்டா இருக்க ஆசைப்படறிங்க? சொல்லுங்க. சாவி தரேன். - சுரேஷ் அறிவித்தான்.

என்னா சுரேஷ்? ப்ளேட்டை மாத்தறே? ஊர்ல என்ன சொன்னே? ஒவ்வொரு ஜோடிக்கும் ப்ரைவசி இருக்கும்ன்னு சொன்னீல்ல? இப்போ ஆண் தனி பொண்ணு தனின்னு பிரிக்கறே? - அஜித் புரட்சி செய்தான்!

இப்போ மேனேஜர் சொன்னதைக் கேட்டீங்கல்ல? சுத்தம் பத்தமா இருந்துட்டு எடத்தக் காலி பண்ணுவோம். தனிமைங்கறது துணிச்சலைக் கொடுக்கும். துணிவு அத்துமீற வைக்கும். அது சரியா வராது அஜித்!

இல்லே! அது காரணம் இல்லே! வேன் சீட்டுலயே அனிதாவோட சேர்ந்து உன்னால உக்கார முடியல; ரூம்ல மட்டும் தங்க முடியுமா? சிவா - சித்ரா ஜோடி சேராது! நீயும் சிவாவும்தான் ஒன்னா தங்கறாப்ல இருக்கும். அதனால எங்க சந்தோஷத்தையும் கெடுக்க பாக்கறே! - திலீப் அஜித்துக்கு ஆதரவாகக் கொடி பிடித்தான்.

இப்படி அவசரப்பட்டு என்னைக் குத்தம் சொல்லுறது தப்பு திலீப்! ஏதும் தப்புத்தண்டா நடந்துடக் கூடாதுன்னுதான் யோசிக்கிறேன்!

இதுக்குதான் அந்த அழுமூஞ்சி சித்ரா உதவாதுன்னு சொன்னேன். யாரு கேட்டாங்க? - ராதிகா சந்துல சிந்து பாடினாள்.

இப்போ என்ன ராதிகா? நீ சரத் கூட தங்க பிரியப்படறியா? சரி! ஒன்னு செய்யலாம். பகல்ல அவங்க ஜோடியோட தங்கிக்கங்க. ராத்திரி மட்டும் தனித்தனியா வந்துடுங்க. இந்த ப்ளான் ஓக்கேவா ஃப்ரெண்ட்ஸ்? - சுரேஷ் சலுகை அறிவித்தான்.

தப்பு பகல்ல நடக்காதோ? - சரத் கேலியாகக் கேட்டான்.

இன்னும் கெட்டுப்போவேன்; எத்தன ரூவா பந்தயம் கட்டறேன்னு கேட்டா நான் என்ன சொல்ல முடியும்? இதோ சாவி எல்லாம் இருக்கு. அவங்கவங்க பிரியப்பட்டதைச் செய்யுங்க! - சாவிகளை பொதுவில் வைத்தான் சுரேஷ்!

சுரேஷ்! எங்களுக்கு உன் கவலை புரியுது! நாங்க ஊசி இடம் கொடுக்கலேன்னா நூல் நுழைய முடியாது. பசங்க மேல சந்தேகப்பட வேண்டாம். ஒரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம். ஏடாகூடம் பண்ணினானுகன்னா, அவனுகளைத் தனியா படுக்கப் போட்டுடுவோம். அதான் ஏகப்பட்ட ரூம் இருக்கே! என்னடி சொல்றிங்க? - ஷாலினி மற்ற பெண்களைக் கேட்டாள். மற்றவர்களும் இசைவு தெரிவிக்கவே எட்டு சாவிகள் கைப்பற்றப்பட்டன. எட்டு ஜோடிகள் கிளம்பிவிட்டன. சிவா, சுரேஷ், அனிதா, சித்ரா மட்டும் நின்றிருந்தனர்.

ஏன் நீங்க மட்டும் நின்னு எங்கள வெறுப்பேத்தறிங்க? கெளம்புங்க.. - ஒரு சாவியை அனிதாவிடம் கொடுத்தான் சுரேஷ். சிரித்துக்கொண்டே வாங்கிய அவள், சித்ராவைத் தன்னோடு அழைத்துப் போனாள்.

டேய் சுரேஷ்! அந்த ட்ரைவர் க்ளீனருக்கு ஒரு ரூம் கொடுத்துடலாம்டா! - சிவா சொன்னான்.

ஆமாமாம்! நம்ம ரென்டு பேர் மட்டும் ஆம்பளைங்களா தங்கப்போறோம்ன்னு வருத்தம் இருக்காதுல்ல. இன்னொரு ஜோடியும் இருக்குன்னு ஆறுதல் பட்டுக்கலாம்!

ஹி..ஹி.. சரிதான் சுரேஷ்! சரி குளிச்சுட்டு சாப்பிடப் போவோம். சாப்பாடு சூப்பரா இருக்கும் போல. வாசனை பட்டையக் கிளப்புது. கிட்டாட்ட சாவியக் கொடுத்துட்டு வரலாம் வா! -

அங்கே அனிதா - சித்ரா அறையில்..

முதலில் சித்ரா குளித்துவிட்டு வந்தாள். பின்னர் அனிதா ஸ்நானம் செய்து திரும்பியபோது.. வெறும் சேலையை மட்டும் உடம்பில் சுற்றியவாறு சித்ரா ஜன்னலருகே நின்றிருந்தாள். அவள் பார்வை வெளியே இருந்த வனத்தை வெறித்தது.

ஏய் சித்து? என்னடி இப்படி அரைகுறையா நிக்கறே? யாராச்சும் வந்தா என்ன ஆகறது?

கதவைப் பூட்டிட்டேன் சித்து! - இன்னும் அவள் பார்வை காட்டில் இருந்து மீளவில்லை.

சரி! ட்ரெஸ் எடுத்து போட்டுக்கறதுக்கு என்ன? ஓ! சாரி சாரி! நான் எடுத்துக் கொடுக்கல இல்ல? ஏண்டி இப்படி ஒட்டாமலேயே இருக்கே? உரிமையா ஒரு ட்ரெஸ்ஸை எடுத்துப் போட்டுக்கறதுக்கு என்ன? நான் உன்னை பிறத்தியா என்னிக்காச்சும் நினைச்சிருக்கேனா? நீ மட்டும் ஏண்டி என்னை தூரத்திலேயே நிறுத்தி வைக்கறே? - அனிதா வருந்தினாள்.

நீ தப்பா புரிஞ்சிருக்கே அனி! நான் திகைச்சுப் போய் நின்னதுக்கு காரணம் நீ சொன்னது மட்டும் இல்லே! இந்த மாளிகைக்குள் காலடி வச்சதுமே என் மனசு ஒரு நிலையில் இல்லே. ஏதோ ஒரு அசிங்கமோ, பயங்கரமோ நடக்கப் போகுதுன்னு என் உள் மனசு சொல்லுது. ரொம்ப இழிவாகவும், கொடூரமாகவும் நான் சாகப்போறேன்னு என் உள்ளுணர்வு எச்சரிக்குது! - சூனியத்தில் விழிகள் நிலைத்திருக்க, சித்ரா உச்சரித்த சொற்கள் அனிதாவின் அடிவயிற்றைச் சில்லிட வைத்தன.

கதாசிரியர்  தொடர்பு  எண் ; 9842XXX6XX

Comments

Popular posts from this blog