சித்ரா' வதை - 8 


மறுநாள் காலை..

டாக்டர் குடும்பத்தினரிடம் விடைபெற்று மாணவர் குழாம் கிளம்பிற்று.

டியர் சில்ரன்! இது என் பிசினஸ் கார்ட்! உங்க கொளுக்கு மலை ட்ரிப்பை முடிச்சுட்டுக் கிளம்பறப்போ எனக்கு கால் பண்ணுங்க. நீங்க வர்ற நேரத்தைப் பொருத்து நல்ல லஞ்ச்சோ, டின்னரோ தயார் பண்ணி வைக்கிறோம். இப்போ வெறும் காஃபி மட்டும் சாப்பிட்டுப் போறீங்க. டிஃபன் சாப்ட்டுட்டு போங்கன்னா கேட்கல!

சாரி அங்கிள்! நாங்க நேற்றே போயிருக்க வேண்டியது. அங்க பென்லே கேஸில் பொறுப்பாளர் காத்துட்டு இருப்பார்.

ஓக்கே கிட்ஸ்! அப்றம் இன்னொரு முக்கியமான விஷயம்! கொளுக்கு மலையில் எல்லா வசதியும் இருக்காது. எதுவும் எமர்ஜென்ஸின்னா எனக்கு தயங்காம தெரிவிங்க. அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்பேன். பெஸ்ட் ஆஃப் லக்!

பை அங்கிள்! பை ஆன்ட்டி! சீரியோ கனி ப்ரோ! - கூத்தும் கும்மாளமுமாக மாணவர் குழு செல்வதை ஆழ்ந்த கவலையோடு சவுதாமினி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ஏன் டியர் அப்செட்டா இருக்கே?

அவங்க போற இடம் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதை அவங்ககிட்ட சொல்லியிருக்கணும் டார்லிங். நீங்களும் சொல்லல. நான் அலர்ட் பண்ண முயற்சி செய்ததையும் தடுத்துட்டிங்க. இது தப்பு இல்லியா?

நாம சொன்னா அங்க எடுபடணும் இல்லியா டார்லிங்? நேத்து அப்படி ஒரு ப்ராங்க் பண்ணிருக்கோம். இப்போ போய் அந்த கேஸில்ல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்குதுன்னு சொன்னா அவங்க நம்பணும்ல்ல?

எதா இருந்தாலும் அவங்ககிட்ட சொல்லி எச்சரிக்கை பண்ணியிருக்கணும். யு காண்ட் கன்வின்ஸ் மி இன் திஸ்..

என் கார்ட் கொடுத்தேனே எதுக்குன்னு நினைக்கறே? வெறும் லஞ்ச்சுக்கு இன்வைட் பண்ணிதானா? இல்ல டியர். அங்க ஏதும் தப்பா நடந்தா நமக்கு கால் பண்ணட்டும்ன்னுதான்! பென்லே கோட்டை தொடர்பா நமக்கு கிடைச்ச விபரங்கள் எவ்ளோ தூரம் உண்மைன்னு தெரியாது. கன்ஃபர்ம் ஆகாத விஷயத்தைச் சொல்லி எதுக்கு அவங்க உற்சாகத்தைக் கெடுக்கணும்? அதுமட்டுமில்ல.. எதையும் லாஜிக்கா யோசிக்கற சித்ரா அவங்க க்ருப்ல இருக்கா! டோன்ட் வரி !!

என்னமோ தெரியல டியர். எல்லாம் சின்ன வயசுப் புள்ளைங்க. எனக்கு மனசு தாங்கல!

ஓக்கே டார்லிங்! அவங்க ஃபோன் பண்ணாலும் சரி! பண்ணாட்டாலும் பாதகமில்லே! இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு கொளுக்கு மலைக்கு நாம ஒரு சர்ப்ரைஸ் விசிட் அடிப்போம்! ரிலாக்ஸ் பேபி!

ம்ம்ம்ம் .. சரி டியர்!

மை சன் கனி!, என்னோட பிஸ்டலை சர்விஸ் செய்து வை. கொஞ்சம் கூடுதல் அம்யுனிஷன் ஆர்டர் பண்ணி வரவழைச்சுக்கோ. தேவைப்படலாம்!

ஓகே டாட்!

___________________________

மாணவர் கூட்டம் வேனை அடைந்தது. ஏற்கனவே சக்கரத்தைப் பொருத்தி வண்டியை சரிசெய்து, கிட்டாவும் போண்டாவும் தயாராக இருந்தனர்.

உங்ககிட்டயும் ஒரு வண்டி சாவி இருக்கா? எப்படி வண்டிக்குள்ள வந்தீங்க ட்ரைவர்?

நீங்க கதவை சரியா பூட்டல. சும்மாதான் சாத்தியிருந்தது தம்பி!

என்னது? பூட்டலியா? டேய் கணேஷ்! என்னடா இது?

அவனை விசாரிக்கறது அப்புறம்! முதல்ல வண்டிக்குள்ள இருந்த நம்ம பேக்கேஜெல்லாம் சரியா இருக்கான்னு பார்ப்போம் வாங்க! - சிவா அபாய சங்கு ஊத, எல்லோரும் தங்கள் உடைமைகளை சரிபார்க்கத் துவங்கினர்.

எல்லாம் பத்திரமாக இருந்தது. ஒன்றைத் தவிர!

'அனி! என்னோட பேக்கைக் காணோம்! - சித்ரா பதட்டத்துடன் சொன்னாள்.

என்னது? காணோமா? இங்க சீட்டுக்கு அடியில்தானே வச்சிருந்தே? எல்லாம் இருக்கு. அதை மட்டும் காணோமா? ரொம்ப காஸ்ட்லி திங்ஸ் எதும் வச்சிருந்தியா?

என் துணிமணிதான் இருந்துச்சு அனி! நல்லவேளை.. பர்ஸ் என் கையில் இருக்கு! கதவுக்குப் பக்கத்திலேயே நம்ம சீட் இருக்குல்ல? யாரோ கதவைத் திறந்து கண்ணுல பட்டதை தூக்கிட்டு ஓடிருக்காங்க!

எல்லாம் இந்த தண்டக்காரப் பயல் கணேஷால் வந்த வினை. வாய்தான் இருக்கு. வேற எதுக்கும் லாயக்கு இல்லே! - சுரேஷ் கடிந்து கொண்டான்.

என் நேரம் சரியில்ல சுரேஷ். பாவம் கணேஷ் என்ன பண்ணும்? அதைத் திட்டாதே! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்!

என்ன வேணும் சொல்லு சித்ரா!

அந்த வேன் காரப் பையனை என்கூட துணையா அனுப்பமுடியுமா கேளு. நான் ஊருக்குத் திரும்பறேன். நீங்க சந்தோஷமாப் போயிட்டு வாங்க! - சித்ரா தன் முடிவைச் சொன்னாள்.

இரு இரு.. நீ ஊருக்குப் போக வேண்டாம். வேற என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம்! - அனிதா தடுத்தாள்.

இல்லே அனி! வஸ்த்ரம் தொலைஞ்சுதுன்னா தரித்ரம் பிடிக்குதுன்னு என் அம்மா சொல்லுவாங்க. இது ஏதோ எனக்கு அபசகுனம் மாதிரி தெரியுது. நான் மேற்கொண்டு வர்றது சரியில்ல! வீணா என் துரதிர்ஷ்டம் ஏன் உங்களைப் பிடிக்கணும். எந்த சுகமும் அனுபவிக்கக்கூடாதுன்னு என் தலையில் எழுதியிருக்கு. நீங்க கிளம்புங்க!

அப்படி நீ வரலன்னா, நாங்களும் போகப் போறதில்ல! வண்டியைத் திருப்பச் சொல்லுவோம். - சுரேஷ் சொல்வதைக் கேட்டு ட்ரைவர் கிட்டா அதிர்ச்சி அடைந்தான். 'அட்வான்ஸோட முடிஞ்சுடுமோ!'

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ராதிகா எழுந்தாள். ''எதுக்கு ட்ரிப்பைக் கேன்சல் பண்ணனும்? எல்லாம் உங்க இஷ்டமா? இப்போ என்ன பொக்கிஷமா கொள்ளை போயிடுச்சு? நாலு 150 ரூபா வாயில் புடவை, ரெண்டு சாயம்போன உள்பாவாடை, மூணு இத்துப்போன ப்ளவுஸ் காணாப்போயிருக்கு. கூடவே கொஞ்சம் பழைய துணியும் இருந்திருக்கும். பேடுக்குக்கூட விதி இல்லாதவளுக்காக டூரை கேன்சல் பண்றாங்களாம்! நல்ல கூத்துதான்.. ஹா..ஹா..!''

ராதிகா சொன்னதை உடனடியாகப் புரிந்துகொண்ட சித்ரா தலை கவிழ்ந்தாள். பிற பெண்களின் மூளையில் உறைக்க சற்று நேரம் ஆயிற்று! முதலில் ரீ ஆக்ட் செய்தவள் ஆர்த்தி! எழுத்து வந்து ராதிகாவின் தோளைப் பிடித்து தன் பக்கம் முரட்டுத்தனமாக திருப்பினாள்.

ஆம்பளைங்க இருக்கற இடத்தில் என்னென்ன பேசணும்ங்கற அறிவே இல்லியா உனக்கு? துணின்னா என்ன கேவலமா? உன் பாட்டியாளும், என் பாட்டியாளும் அதை வச்சுதான் ஒப்பேத்துனாங்க. ஒழுங்கா சித்ராகிட்ட மன்னிப்பு கேளு! - உக்கிரமாக நின்றாள் ஆர்த்தி!

அவளைச் சொன்னால் உனக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது? அவளுக்கு நீ என்ன எடுப்பா? - ராதிகாவும் சிலுப்பினாள்.

இவ்வளவு மட்டரகமா பேசினால் யாரா இருந்தாலும் கேக்கலாம்டி எடுபட்ட நாயே! உனக்கு அவ்ளோதான் மரியாதை. இவ்ளோ தூரம் தாண்டி வந்துட்டதால உன்னை சும்மா விடறேன். இதையே மதுரைக்கு அந்தப்பக்கம் சொல்லியிருந்தீன்னா செருப்பால அடிச்சு வண்டியை விட்டு எறக்கி விட்டுருப்பேன். - சொன்னதோடு அல்லாமல், ராதிகாவின் சுடிதார் டாப்ஸை கொத்தோடு பற்றித் தூக்கினாள் ஆர்த்தி. பட்டன்கள் தெறித்தன.

சரத்! பாருடா.. எவ்ளோ அராஜகம் பண்றான்னு! - காதலனை துணைக்கு அழைத்தாள் ராதிகா. அவனோ யாருக்கென்று பேசுவது எனத் தெரியாமல் நெளிந்தான்.

அராஜகம் பண்றது ஆர்த்தி இல்லே! நீ! நேத்துலேருந்து நானும் பார்க்கறேன். உன் சவுரியத்துக்கு எல்லாரையும் மானாங்கன்னியா பேசறே! யார் கொடுத்த உரிமை இது? - சங்கீதாவும் கோதாவில் குதித்தாள். ''அனி! எதுக்கு இந்தமாதிரி மேனர்ஸ் தெரியாத ஜந்துவை லிஸ்ட்ல சேர்த்தே? அந்த மஹா - செந்தில் ஜோடியை அழைச்சுட்டு வந்திருக்கலாம்ல்ல? ட்ரிப்பாவது கலகலப்பா இருக்கும்!

இதெல்லாம் சித்ராவே இழுத்து விட்டுக்கிட்டது சங்கீ! அவதான் லிஸ்ட் ஃபைனலைஸ் பண்ணினா. மஹா ரெகுலரா அட்டென்டன்ஸ் போடமாட்டா. திடீர் திடீர்ன்னு காணாப் போயிடுவான்னு இவளச் சேர்க்க சொன்னா! - அனிதா விளக்கம் அளித்தாள்.

சரி சரி விடு அனி! நான் அவமானப்படறது என்ன புதுசா? என்னைக் குத்தறதுல அவளுக்கு சந்தோஷம்ன்னா இருந்துட்டுப் போகட்டும். எனக்காக உங்க ஒற்றுமை கெடவேண்டாம். நான் புறப்படறேன். - சித்ரா வண்டியை விட்டு கீழே இறங்க முனைந்தாள். சிவா சொல்லவியலாத தவிப்புக்கு ஆளானான்!

இருடி! இப்போ என்ன? உனக்கு போட்டுக்க ட்ரெஸ் இல்லே! அவ்ளோதானே? இந்த ட்ரிப்புக்காக நாங்க ஒவ்வொருத்தரும் புது ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கோம். அதில் உனக்கு பொருந்தறதைத் தரோம். என்னடி சொல்றிங்க? - ஜோதிகா சொல்ல, மற்றவர்கள் வழிமொழிந்தனர். ''ஓகே ஜோ! நோ ப்ராப்ஸ்! சித்து நம்மோட வந்தாப் போதும்!''

பின்ன என்னடி? இவ்ளோ பேர் உனக்காக இருக்காங்க. அவங்களை விட்டுட்டுப் போயிடுவியா நீ? - அனிதா கேட்க, பொங்கிப் பெருகும் கண்களைத் துடைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தாள் சித்ரா. சந்தோஷத்தோடு வண்டியைக் கிளப்பினான் கிட்டா!

___________________________

கொளுக்கு மலைப் பாதை கரடுமுரடாக இருந்தது. இரு பெரும் குன்றுகளுக்கு இடையே பொங்கிப் பெருகும் காட்டாறு. ஒரு பழமையான மரப்பாலம் அந்த குன்றுகளை இணைத்து காட்டாற்றைக் கடக்க உதவியது.

பாலத்தைக் கடப்பதற்குமுன் வண்டியை நிறுத்தினான் கிட்டா. ''தம்பிகளா.. இந்தப் பாலம் ரொம்பப் பழசு. எல்லாரையும் ஏத்திக்கிட்டு இதைத் தாண்டிப் போறது ஆபத்து. எடை தாங்காது. கொஞ்சம் எறங்கிக்கங்க. நான் முன்னால வண்டியை எடுத்துட்டுப் போறேன். பத்திரமா போயிட்டேன்னா அப்புறம் நீங்க வந்து சேர்ந்துக்கங்க. பாலம் உடைஞ்சு ஆத்தோட போனா அது என்னோட போகட்டும். டேய் போண்டா.. நீதான் முதல்ல எறங்கணும். எறங்கு!''

எல்லோரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி நிற்க, குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு வண்டியை நகர்த்தலானான் கிட்டா! எல்லோரும் படபடக்கும் நெஞ்சோடு பார்த்துக்கொண்டிருக்க ஆமை வேகத்தில் ஊர்ந்தது வண்டி. அந்த வேகத்துக்கே பாலம் அதிர்ந்து நடுங்கியது.

இறையருளால் பத்திரமாக அக்கரை சேர்ந்தது வண்டி. ''ஹேய்!'' என்ற உற்சாகக் கூச்சலுடன் பின் தொடர்ந்த மாணவர் கூட்டம் மரப்பாலத்தில் கால் வைத்ததும்தான் தெரிந்தது. இது மரப்பாலம் அல்ல; மரணப் பாலம் என்று! கீழே ஆழத்தில் சுழித்துக்கொண்டு ஓடிற்று காட்டாறு. விழுந்துவிட்டால், நீச்சல் தெரிந்தால்கூட பரலோகம்தான்! அதிரும் இதயத்தோடும், உதிரும் தன்னம்பிக்கையோடும் ஒவ்வொருவராக எதிர்ப்புறம் சென்று பெருமூச்சு விட்டனர். பின் அனைவரும் ஏறிக்கொள்ள பயணம் தொடர்ந்தது.

___________________________

பென்லே கேஸில் மர்ம பங்களா..

படத்தில பார்த்ததைவிட ரொம்பப் பீதியா தெரியுதே மாப்ள! இதிலதான் 10 நாளைக்கு குடியிருக்கணுமா? - திகிலோடு கேட்டான் கணேஷ்.

வண்டி வந்த சத்தம் கேட்டு பொறுப்பாளனும், உதவியாளனும், வாசலுக்கு வந்து வரவேற்றனர். ''வெல்கம் டு பென்லே கேஸில்!''

அட! முட்டுக்காட்டுல பட்லர் இங்கிலீஸ்லல்ல வரவேற்கறான்.. பெரிய ஹாலிவுட் ஸ்டூடியோ வச்சிருக்கானுக.. கொலைகாரன் கொட்டாய் மாதிரி இருக்கு. பெருமையைப் பாரு!

ப்ச்ச்! திங்ஸ் எடுத்துட்டு எறங்கு மாப்ள!

பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தன.

நான் காத்தையா. இந்த பென்லே கேஸில் மேனேஜர். இவன் என் உதவியாளன் கருப்பையா!

மாப்ள! பேரைக் கவனிச்சியா? மர்ம மாளிகைக்கு ஏத்த பேருதான்! ஒருத்தன் பேரு காத்து. இன்னொருத்தன் பேரு கருப்பு. நல்லா சோடி சேர்ந்தானுகடா! அந்த அசிஸ்டன்ட் முகரையப் பாரு.. புளியங்காய் தின்னவன் மாதிரி!

டேய் கணேசு! கொஞ்சம் திருவாயை மூடிக்கடா! இங்க ஏதும் டேஞ்சர் வந்தா அது உன் வாயாலதான் இருக்கும் போலருக்கு! - கணேஷின் பேச்சை இரசித்தாலும், சூழ்நிலை கருணாசை பயமுறுத்தியது.

வெளியில் பார்த்ததைவிட பிரமாண்டமாக இருந்தது பங்களா. ஒரு பெரிய ஹால். பொதுக்கூட்டமே நடத்தலாம் போல விசாலமாக இருந்தது. ஹாலின் இரு பக்கமும் வரிசையாக அறைகள். பக்கத்துக்கு எட்டு வீதம் பதினாறு அறைகள். முதல் அறையை ஆஃபீஸ் ரூமாக மாற்றியிருந்தார்கள்.

''ஃப்ரென்ட்ஸ்.. சில விஷயங்கள் சொல்றேன் கேட்டுக்கங்க.'' - மேனேஜர் காத்தையா பேசத் துவங்கினான். ''இங்க 15 ரூம் இருக்கு. எல்லாம் உங்களுக்குதான். எப்படி வேணாலும் பயன்படுத்திக்கங்க. இந்த ஹால்தான் டைனிங் ஹாலும். உங்களுக்கான எல்லா உணவுத் தேவைகளையும் எங்களால முடிஞ்சவரைக்கும் பாத்துக்கறோம். அப்றம் சில கண்டிஷன்ஸ்.. கண்டிஷன்னு சொல்றதைவிட ஆலோசனைன்னு எடுத்துக்கங்க. இந்த கீழ் தளம் பூரா உங்க பயன்பாட்டுக்குதான். ஆனா மேலே ரெண்டு ஃப்ளோர் இருக்கு. அங்க நீங்க எக்காரணம் கொண்டும் போகக்கூடாது. . ஏன்னு கேட்காதீங்க. அது அப்படித்தான்!''

மாணவர்கள் ஹாலின் கடைசியில் இருபுறமும் இருந்த பிரமாண்ட மாடிப்படிகளை குழப்பத்துடன் அவதானித்தனர்.

அப்புறம் காலைல உங்க பாத்ரூமுக்கு வெந்நீர் வரும். விறகுக்கட்டை போட்டு எரிக்கற பாய்லர்ங்கறதால ஒரு மணி நேரம் மட்டும்தான் எங்களால் வெந்நீர் கொடுக்க முடியும். எட்டு டு ஒன்பது வெந்நீர் வரும். இந்த ஊர்ல இன்னும் எலெக்ட்ரிசிட்டி வரல்ல..

தெரியும்.. சரத் சொல்லியிருக்கான் மிஸ்டர் காத்தையா!

வெரிகுட். அப்போ நான் நிறைய சொல்ல வேண்டியதில்லே. ஜெனரேட்டர் கரண்ட்ங்கறதால சாயந்தரம் ஆறு - பத்து மணி வரைக்கும் கரண்ட் கொடுப்போம். அந்த நேரத்தில் உங்க லாப்பி, மொபைல் சார்ஜ் போட்டுக்கோங்க. அப்புறம் ஒரு முக்கிய விஷயம். ஹாலுக்கு இடதுபுறம் இருக்கும் அறைகளில் தங்கறவங்க தங்கள் ஜன்னல்களைத் திறக்கவே திறக்காதீங்க. எல்லாம் கண்ணாடி ஜன்னல்தான். அதுக்கு திரைத்துணி இருக்கும். சாயந்தரம் ஆனதும் அந்த ஸ்க்ரீனை இழுத்து மூடிடுங்க.

ஏன் அப்படி?

எதுக்கும் காரணம் கேட்காதீங்கன்னு சொன்னேனே! - புன்னகையுடன் தொடர்ந்தான் காத்தான். ''நம்ம பங்களாவுக்குப் பின்புறம் காடு இருக்கு. பூச்சி பொட்டு வரும். ராத்திரில காட்டைப் பார்த்தா பயமா இருக்கும். அதுக்காகத்தான் சொல்றேன். ஓகே! இன்னிக்கு மட்டும் ஒரு விதிவிலக்கா இப்போ வெந்நீர் கொடுக்கச் சொல்லியிருக்கேன். போய் குளிச்சுட்டு ஃப்ரெஷ் ஆகி வாங்க. உங்களுக்காக டாம் மீன் குழம்பும், காட்டுக்கோழி ஃப்ரையும் டைனிங் டேபிளில் சுடச்சுடக் காத்திருக்கும். கெட் யுவர்செல்ஃப் ஃப்ரெஷ் கைஸ்!

சார்! நீங்க இந்த ஊர்க்காரர்ன்னு கேள்விப்பட்டோம். ஆனா உங்க பேச்சு, நிர்வாகத்தில் ஒரு நகர கலாச்சாரம் தெரியுதே! எப்படி? - சிவா வினவினான்.

அப்புறம் எல்லாம் விரிவா பேசலாம்! நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சது திருச்சி எஸ் ஆர் எம்லதான்! - சொன்ன காத்தானின் முகம் இறுகுவதைப் பார்த்து உதவியாளன் நடுங்கினான். விருந்தினர்கள் எவரும் அதைக் கவனிக்கவில்லை!

COPYRIGHT OWNER'S CONTACT ; 9842XXX6XX

Comments

Popular posts from this blog