சித்ரா' வதை - 6


அது ஒரு ட்யுப்ளெக்ஸ் பங்களா. மேல் விதானம் உயரத்தில் இருந்தது. அதில்  தொங்கிய மிக பிரமாண்டமான இத்தாலி சரவிளக்கு அந்த ஹாலுக்கு மெருகு  ஊட்டியது . மாளிகையின் உள் அலங்கரிப்பும், தேக்கு மரத்தாலான இருக்கைகளும் செட்டிநாட்டு பாணியை நினைவூட்டின.

''எல்லாரும் சாப்பிட்டாச்சா? சங்கோஜப்படாமச் சொல்லுங்கோ. ஃப்ரிட்ஜ்ல மதியம் வச்ச மீன் குழம்பு இருக்கு. 10 நிமிஷத்தில் ஆவி பறக்க இட்லி தயார் பண்ணிடறேன்! - வீட்டுக்காரப் பெண்மணியின் வாஞ்சையும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவள் காட்டிய பரத அபிநயமும் மாணவர்களின் திகிலைக் குறைத்தன. அவள்பால் ஒரு ஆர்வத்தையும் உண்டாக்கின.

தேன்க்ஸ் மேடம்! எல்லோரும் சாப்ட்டாச்சு. இப்போ நாங்க ஒரு டெலிபோன் பண்ணிக்கணும். எங்களுக்காக ஒருத்தர் காத்துட்டு இருப்பார். விஷயம் சொல்லணும். - சுரேஷ் சொன்னான்!

டெலிபோன் பண்ணனுமா? ( வலது கையில் நடு விரல்களை மடக்கி, சுண்டு விரலையும் கட்டை விரலையும் பக்கவாட்டில் நீட்டி காதருகே கொண்டு போனாள்.) என் பெட்ரூமில் ( இரு கைகளையும் வணங்குவது போல் குவித்து அதில் தலை சாய்ப்பது போல் ஒரு அபிநயம்) இருக்கு. வாப்பா.. (இரு கை விரல்களையும் மடக்கி ஆர்மோனியம் வாசிப்பது போல ஒரு சைகை). - சொல்லிவிட்டு, ஒரு கரத்தை மடக்கி இடுப்பில் வைத்து, அடுத்த கையை பக்கவாட்டில் வீசியவாறு காலைத் தூக்கி மடக்கி வைத்து ஒரு ஒயில் நடையுடன் முன்னே சென்றாள். சுரேஷ் பின் தொடர்ந்தான்.

போகும் வழியில் ஒரு நிலைக்கண்ணாடி. அங்கு சற்று நின்று தன் அலங்காரத்தைச் சரிசெய்துகொண்டாள் வீட்டுக்காரப் பெண்மணி. இதைப் பார்த்த சுரேஷின் காதலி உஷாரானாள். 'பார்ட்டி கொஞ்சம் அரைக் கிராக்கு மாதிரி இருக்கு. பெட்ரூம் உள்ளே போய் ஏதும் பிரச்னை ஆயிடப் போவுது!' என்று நினைத்தாளோ என்னவோ.. அவளும் எழுந்து ஓடி சுரேஷுடன் இணைந்துகொண்டாள்.

மாப்ள.. என்னடா இந்தம்மா? டிவிடி ப்ளேயர் எதையும் முழுங்கிருச்சா? இவ்ளோ ஆக்ஷன் பண்ணுது? டிவியில் செவுட்டு நியூஸ் வாசிக்கற பொம்பள மாதிரி ஒரே அலப்பறையா இருக்கே! - நண்பன் கருணாசிடம் வினவினான் கணேஷ்.

டேய்.. செத்த சும்மா இருடா! எனக்கும் அதே டவுட்டுதான்.

சற்றுநேரத்தில் போன் செய்துவிட்டு மூவரும் திரும்பினர். வரும்போதும் கண்ணாடிமுன் சிறு ஹால்ட். தன்னை அழகுபடுத்திக்கொள்வதும் தொடர்ந்தது. மாணவர்களின் வியப்பு கூடிக்கொண்டே போயிற்று.

ஓகே கய்ஸ். லெட் மி இன்ட்ரட்யுஸ் ஃபர்ஸ்ட்! நான் சௌதாமினி. நீங்க மினின்னு கூப்பிடலாம். உங்களப்பத்தி சொல்லுங்கோ!

நாங்க மதுரைக்கு பக்கம் மேலூர் மேடம். கல்விச் சுற்றுலா வந்தோம். உங்க பங்களாவுக்கு எதிரே வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு! - சுருக்கமாகச் சொன்னான் சிவா!

அங்க ஏதோ ஒரு துஷ்ட சக்தி உலவுதுன்னு சொல்றாங்க. ஆனா நான் எதையும் பார்த்ததில்லே. அடிக்கடி அந்த இடத்தில் வண்டி ரிப்பேர் ஆகுது. இல்லேன்னா விபத்து ஆகுது. நாலு நாளைக்கு முந்தி நடந்த ஆக்ஸிடன்ட்ல 40 வயசுப் பொம்பள எறந்துட்டா! - பீதியைக் கிளப்பினாள் சவுதாமினி. மாணவிகள் மனதில் இலேசான ஒரு நடுக்கம்.

மேடம்..

மினின்னு கூப்பிடுங்கோன்னு சொன்னேனே. எனக்கு அப்படி ஒன்னும் வயசாகிடலை. மேடம்லாம் வேண்டாம்.

ஆன்ட்டின்னு கூப்பிடலாமா மேடம்? - கணேஷ் சந்தேகம் கேட்டான்.

டேய்.. சும்மார்ரா! - சுரேஷ் அவனை அடக்கினான். ''மேடம்.. வாசல்ல போர்டு பார்த்தோம். டாக்டர். ஷண்முகமணி..

யெஸ்! அவர் என் கணவர்.

சாரைப் பார்க்கலாமா?

வாய்ப்பு இல்லியே தம்பி! போர்டுலேயே போட்டிருக்குமே! டாக்டர் அவுட்டுன்னு! ஹா..ஹா.. அவர் மேலே போயாச்சு! - அதற்கும் ஒரு அடவு காட்டினாள் மினி!

அப்போ நீங்க மட்டும்தான் இந்த பங்களால இருக்கீங்களா? குழந்தைகள் ஏதும்..

அந்த பாக்கியம் இல்லை! நான் நடனத்துக்கு என் வாழ்வை அர்ப்பணிச்சுட்டு இருந்தேன்.லேட் மேரேஜ் தான். இப்போ நான் ஒரு அழகான இளம் விதவை!

கெரகம்! சொன்னது மூணு வார்த்தை. அதில் ரெண்டு பொய்யி! - கருணாஸ் காதைக் கடித்தான் கணேஷ்!

என்னடா?

அழகானன்னு சொன்னுது பாரு! இது அழகா.. ஜப்தி ரேட்டுல புடிச்சுட்டு வந்த சந்திரமுகி மாதிரி இருக்கு! அடுத்து இளம் விதவைன்னு சொன்னுது பாரு.. எங்க அப்பத்தாவுக்கு இதைவிட ரெண்டு மூணு வயசுதான் கூடுதலா இருக்கும்..

டேய் சும்மார்ர்றா கொரங்கு!

என்ன ரெண்டு தம்பிகளும் ஏதோ பேசிக்கறீங்க? எனக்கும் சொல்லுங்களேன்!

அபிநய சரஸ்வதி கேக்குது. சொல்லுடா!

இல்லே.. இவ்ளோ சின்ன வயசில உங்களை விட்டுட்டு டாக்டர் சார் எப்படி எறந்து போனார்ன்னு கருணாஸ் கேக்கறான் மேடம்!

அவராவே எறந்துட்டார்..

ரெம்பப் புதுசு! எங்க ஊர்லல்லாம் இதுக்கு வாடகைக்கு ஆள் புடிப்போம். - கணேஷ் முணுமுணுத்தான்.

பார்டன்..

இல்லே.. தற்கொலை பண்ணிக்கிட்டாரான்னு கருணாஸ் கேட்கறான். ஏதும் டான்ஸ் ஆடிக் காட்டினீங்களோன்னு அவனுக்கு சந்தேகம்.

ஹா..ஹா.. வெரி ஃபன்னி பாய்ஸ்! உயிர் போய்தான் எறந்தார். அதோ ஃபோட்டோவில் இருக்கார் பாருங்க. அவர்தான் த க்ரேட் டாக்டர். ஷண்முக மணி! - மினி காட்டிய இடத்தில் ஒரு போர்ட்ரெய்ட் மாட்டப்பட்டிருந்தது. கொஞ்சம் மேற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் நெல்சன் மன்டேலாவும் கலந்த கலவையாக இருந்தார் ஷண்முக மணி!

ஸாரி மேடம்!

நோ மென்ஷன்ஸ் ப்ளீஸ்! வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.ஓகே! கொஞ்சம் டீ சாப்பிடுவோமா?

இல்லே மேடம்! டீ தூக்கத்தைக் கெடுத்துடும்!

ஓ! தூங்கலாம்ன்னு வந்திருக்கீங்களா? நோ ப்ராப்ஸ்! அப்போ எல்லோருக்கும் பாதாம் பால் போட்டுட்டு வரேன். ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க! - கிச்சனுக்குள் ஐக்கியமானாள் மினி!

________________________________

சமையலறை உள்ளே இருந்து அருமையான பாதாம் பால் வாசனை வந்தது. ஆனால், கால் மணி நேரத்துக்கு மேலாகியும் மினி வெளியில் வரவில்லை.

எங்கடா டான்ஸ் பாப்பாவைக் காணோம்?

டேய்! அது பாப்பா இல்லே. டான்ஸ் ஆத்தாடா!

ஏதோ ஒன்னு! ஆள் எங்கே?

என்னைக் கேட்டா? பால் கறக்க மாடு தேடிப் போயிருக்கோ என்னவோ?

மாடு கிடைக்கலியாம். கன்னுக்குட்டி தான் இருக்காம். வளரட்டும்ன்னு பக்கத்துலயே பட்டறையைப் போட்டுடுச்சு போல!

இல்லடா! நம்ம ராம ராஜன் சார் பாட்டு பாடினது போல இது ஆட்டம் போட ஆரம்பிச்சுடுச்சோ என்னவோ!

டேய்! நமக்கு இக்கட்டான நேரத்தில் ஷெல்ட்டர் கொடுத்து உபசரிக்கிறவங்களை இப்படித்தான் கிண்டல் பண்ணுவீங்களா? மேனர்ஸ் இல்லாம நடந்துக்காதீங்கடா! - சிவாவின் கண்டனத்துக்குப் பிறகுதான் கணேஷும் கருணாசும் அடங்கினர்.

அனிதா! என்னாச்சுன்னு போய்ப் பாரு!

அனிதாவும், ஷாலுவும் கிச்சனுக்குப் போய்ப் பார்த்தனர். வரிசையாக டம்ளர்களில் பாதாம் பால் ஆவி பறக்க காத்திருந்தது. ஆனால் மினியைக் காணோம்!

ஆண்ட்டி..

சமையலறையில் தேடினர். ஆனால் ஆள் அகப்படவில்லை. வந்து சொன்னபோது மற்றோரும் அதிர்ந்தனர்.

ஆண்ட்டி.. வேர் ஆர் யூ? - ஆளுக்காள் கூப்பிடத் தொடங்கினர். சிலரது குரலில் பீதி இழையோடத் துவங்கியிருந்தது.

அதேநேரத்தில் மாடியில் இருந்த ஒரு அறையின் கதவு திறந்தது. ட்யூப்ளெக்ஸ் மாளிகை ஆதலால் வீட்டின் உள் பக்கமும் பால்கனி இருந்தது. சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் அந்த பால்கனியில் தோன்றினார்.

யார் நீங்கள்லாம்? ஏன் இப்படிக் கூப்பாடு போடறிங்க? - குரலில் கடுமை தெறித்தது. - நிமிர்ந்து பார்த்த மாணவர்கள் அதிர்ந்தனர். சற்று முன் யாரை இறந்துவிட்டார் என்று மினி சொன்னாளோ, அதே மனிதர் கோபத்துடன் மேலே நின்றிருந்தார்.

கேட்டதுக்கு பதில் சொல்லாம ஊமை மாதிரி நின்னா என்ன அர்த்தம்? - பிரமாண்ட மாடிப்படிகளில் மெல்ல இறங்கி வந்தார் அந்த மனிதர். ஹவுஸ் கோட்டில் இருந்தார். கையில் ஒரு உயர் ரக நிறுவனத்தின் பாக்கு டப்பா இருந்தது. அடிக்கடி பாக்கு மெல்லும் வழக்கம் உள்ளவராக இருக்கக்கூடும்.

அருகில் வந்ததும், அவரையும் போட்டோவையும் மாறி மாறிப் பார்த்து திகைத்துப் போயினர் வைகைக் கல்லூரி மாணாக்கர்கள்.

இந்த நேரத்தில் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எப்டி வீட்டுக்குள்ள வந்தீங்க? - அவரின் கேள்வி விநோதமாக இருந்தது!

நாங்க மதுரை ஸ்டூடன்ட்ஸ் சார். எங்க வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு. உங்க மிசஸ்தான் கதவைத் திறந்து விட்டாங்க.

என்ன உளறல் இது? என் மிசஸ்ஸா? அவ எப்படி வர முடியும்? - டாக்டரின் குரலில் எரிச்சலும், வியப்பும் சம அளவில் இருந்தது. மாணவர்களின் குழப்பம் மேலும் அதிகரித்தது. ''பூரா கட்டுமே சோக்கரா?''

ஆமாம் சார்! மேடம் சௌதாமினின்னு சொன்னாங்க.

பேர் சரிதான்! ஆனா அவங்களை நீங்க பார்த்ததாச் சொல்றதுதான் எனக்கு வியப்பா இருக்கு. சரி.. இப்போ எங்கே அவங்க?

எங்களுக்கு பால் எடுத்துட்டு வரேன்னு கிச்சனுக்குப் போனாங்க.. - சொல்லி முடிக்கும் முன்னரே கிச்சனுக்கு விரைந்தார் டாக்டர். ஷண்முக மணி! அங்கு காத்திருந்த பால் குவளைகள், மாணவர்கள் சொல்வது உண்மைதான் என்று மெய்ப்பித்தன. உள்ளே பார்வையால் துழாவிவிட்டு தளர் நடையுடன் திரும்பி வந்தார்.

ப்ளீஸ் பி சீட்டட்! கொஞ்சம் ஹார்ஷா நடந்துகிட்டதுக்கு என்னை மன்னிச்சுடுங்க பாய்ஸ்!

இட்ஸ் ஓகே சார்! ஆன்ட்டி திடீர்ன்னு எங்கே போயிட்டாங்க?

சொல்றேன்! எல்லாம் அப்படியே உக்காருங்க. - கையில் இருந்த பாக்கு டப்பாவில் இருந்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். சற்று கண்ணை மூடி ஆலோசித்தார். பின் பேசலானார்.

ஷி வாஸ் அன் ஏஞ்சல்! நடனம்ன்னா அவளுக்கு உயிர்! முறைப்படி 10 வருஷத்துக்கு மேல பரதம் கத்துக்கிட்டவ என் மினி! அதுதான் தன் வாழ்க்கைன்னு இருந்தவளை ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சேன். மனசப் பறி கொடுத்தேன். நானும் என் ஆராய்ச்சியிலேயே சொந்த சுக துக்கத்தைப் பாராம இருந்தவன் தான். ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சு. ஒன் ஃபைன் மார்னிங் சிம்ப்பிளா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

இப்போ எதுக்கு இந்த கொசுவத்தி என்று எண்ணி கணேஷ் கொட்டாவி விட்டான்.

கல்யாணத்துக்கு அப்புறம் அவங்கவங்க தொழில்ல இன்னும் உற்சாகமா இருந்தோம். ரெண்டு வருஷத்துக்கு முந்தி, உங்க ஊருக்குதான் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போனா. பிரமாண்ட நிகழ்ச்சி அது. சன்ல நேரடி ஒளிபரப்புகூட பண்ணினாங்க. விஜய் சேதுபதி சீஃப் கெஸ்ட். மேடையில் ஆடிட்டு இருக்கும்போதே செட் இடிஞ்சு விழுந்து, என் மினி அந்த இடத்திலேயே..

என்ன? - அனைத்து மாணவர்களும் தங்களை அறியாமல் அலறினர்.

யெஸ்! தனக்குப் பிடிச்ச நடனத்தை ஆடிக்கிட்டு இருக்கும்போதே என் மினி செத்துப் போயிட்டா! ஷி ஈஸ் நோ மோர்!

இதை எங்களால நம்ப முடியல ஸார்! அரை மணி முன்னாடி எங்ககூட எவ்ளோ அன்பா பேசிட்டு இருந்தாங்க தெரியுமா?

உங்களால நம்ப முடியாதுதான்! உங்ககூட பேசிட்டு இருந்தது அவதானே? - அந்த போட்டோவை சுட்டிக் காட்டினார் டாக்டர். ஷண்முகமணி. சற்றுமுன் வரை எந்த படத்தில் அவர் காட்சியளித்தாரோ, அதே படத்தில் இப்போது சவுதாமினி பரதநாட்டிய உடையில் அபிநயம் காட்டிக்கொண்டு இருந்தாள். பெயர், பிறப்பு இறப்பு விவரங்கள் தெளிவாகப் போட்டிருந்தன. மாணவர்களின் இதயம் சக்திக்கு மீறி இயங்கத் தொடங்கிற்று!

CONTACT; 9842XXXXX6

Comments

Popular posts from this blog