சித்ரா' வதை - 3
வாடகை உந்துகள் தரிப்பிடம், மேலூர்..
பகட்டாகவும், ஒய்யாரமாகவும் பளிச்சென்று தோற்றமளிக்கும் சீட்டர் வேன் சீமான்கள் நடுவே பொலிவிழந்த ஏழையைப்போல 'நானும் வண்டிதான்!' என்று அந்த வேனும் நின்றுகொண்டிருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ணா. சக ஓட்டுநர்களுக்கு கிட்டா. கைகள் நிறைய விரல்களும், வாழ்க்கை நிறைய பிரச்னைகளும் வைத்திருக்கும் ஒன்டிக்கட்டை. வேன் உரிமையாளன் அவன் தான். ஆனால் 'மொத்தமும் கடன்.. மோதிவிடாதே நண்பா!' என்ற ஸ்டிக்கர்களோடு திரியும் ஆயிரக்கணக்கான சேட்டு செல்வ ஆதாரங்களில் நம் கிட்டாவும் ஒருவன்!
மாதத் தவணை செலுத்தி இரண்டு மாதமாகிறது. கொரோனா காரணமாக வண்டி ஓட்டம் இல்லை. டீலக்ஸ் கோச்களே சீந்துவாரின்றி நிற்கின்றன. இவனின் சாதா வண்டிக்கு மட்டும் சவாரி எங்கிருந்து வரப்போகிறது? வண்டி ஓரளவுக்கு ஓடும் நேரங்களில் முதல் செலவாக தவணைப் பணத்தை எடுத்து வைப்பவன் கிட்டா! ஹ்ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.. கிட்டா வண்டியின் கிளீனர் பாய் போண்டா. 15 வயதுச் சிறுவன். போக்கிரி படத்தில் அசினின் தம்பியாக வரும் கேரக்டரை நினைவுபடுத்தும் உருவம். சதா அறவை போட்டுக்கொண்டிருக்கும் வாய். மற்றநேரங்களிலும் வாய் சும்மா இருக்காது. சளசளவென்று எதையாவது பேசிக்கொண்டிருக்கும். இன்று கொலைப்பட்டினி. பாவம்.. சாமியே சைக்கிளில் போகுது. பூசாரிக்கு புல்லட் ஒரு கேடா?
டேய் போண்டா.. எங்கடா போய் வம்பளந்துகிட்டு இருக்கே? வண்டியைத் துடைச்சு வச்சா நாலு பேர் கண்ணுல பளிச்சுன்னு படும்ல?
ஹே..ஹே.. எப்படிண்ணே சிரிக்காம சோக்கு அடிக்கறே? நம்ம வண்டியா? பளிச்சுன்னா? நாலு தடவை தொடச்சுட்டேன். இனியும் தொடச்சா தகடு தேய்ஞ்சு உள்ள இருக்கற சீட்டெல்லாம் தெரியும்!
உனக்கு கிண்டலா இருக்கு.. சேட்டு ஆளுக எப்போ வண்டியைத் தூக்க வருவானுகளோன்னு நான் பயந்துகிட்டு இருக்கேன்..
அந்த பயம் மத்த வண்டிக்காரனுகளுக்குதான்.. நமக்கு வேணாம்ண்ணே.. இதத் தூக்கிட்டுப்போய் எடத்தை அடைச்சுக்க மாட்டாங்க. அதோட வண்டி நல்லா ஓடுனப்போ நாம அட்வான்ஸ் டியூ கட்டினவங்க. சேட்டும் மனுசன் தான். எல்லார் மாதிரியும் உன்ன நினைக்க மாட்டாரு! கவலையை உடுண்ணே!
உண்மைதான்! பண வரவு செலவில் கிட்டா கரெக்டாக இருப்பான். அவன் நாணயத்தைப் பார்த்து நல்ல வண்டியா வாங்கிக்கோ; கேக்குற பணம் தாரேன்னு சேட்டு சொன்னதுண்டு. விரலுக்கு ஏத்த வீக்கம் போதும் சேட்டுன்னு சொல்லி இந்த வண்டியை எடுத்தான் கிட்டா! கிட்டா என்றால் சேட்டு மனதில் நல்ல எண்ணம் இருக்கிறது!
கிட்டா பிறந்தபோது, அவனைப் பார்த்த கிழவிகள் வியந்து சொல்லுவார்கள்.. ' கைக்கு ஆறு விரலோட புள்ள பொறந்துருக்கு. காசு பணத்தை எண்ணிக்கிட்டே இருக்கும். அதிர்ஷ்டக்காரப் புள்ள என்று திருஷ்டி கழிப்பார்கள். ஒரு விரல் அளவுக்குக்கூட வளமை வந்ததில்லை!
டேய் போண்டா! மணி நாலுக்கு மேல ஆயிடுச்சே. வீட்டுக்குப் போய் சோறு தின்னுட்டு வரலாம்ல்ல? ஏன் இங்க கெடந்து காயறே?
ரெண்டு மாசமா ஊட்டுக்கு சம்பளம் கொடுக்கலியா? காலையிலேயே அப்பாரு திட்டிதான் அனுப்புனாரு. இன்னிக்கு சம்பள பாக்கியை வாங்கிட்டு வரலன்னா சோறு கெடையாது நாயேன்னாரு!
அடடா! அப்படி ஒரு இக்கட்டா? - கிட்டா தன் சட்டைப்பையைத் துழாவினான். சின்னதும் பெருசுமாக 21 ரூபாய் இருந்தது. '' இந்தாடா போண்டா.. பாய் கடைக்குப் போய் மூணு பரோட்டா, நிறைய சால்னா ஊத்தித் தின்னுட்டு வா. பசி தாங்க மாட்டே.. போ போ.. மைதா ரொட்டி, நைட்டு வரைக்கும் வெயிட்டா வயித்துல கிடக்கும். கெளம்பு..
அண்ணே.. நீயும்தான் காலேலருந்து சாப்பிடல. உன் வயிறு காயும்போது நான் எப்படித் திம்பேன். வேணாம்ண்ணே! கையில் காசு இருக்கும் போது எத்தினி நாள் கொத்து பரோட்டாவும் கொடல் கறியும் வாங்கித் தந்திருக்கே? நல்ல சவாரி வரட்டும். பிரியாணி திம்போம். ஒருநாள் பட்டினியில் என் வயிறு குறைஞ்சுடாது. உடு கழுதைய..
குபுக்கென்று கண்ணீர் முட்டியது கிட்டாவுக்கு. யார் இவன்? ஏன் பூனைக்குட்டி போல என் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கிறான்? என் தலையெழுத்துக்கு எந்த உறவுமுறையும் தரிக்கவில்லையே.. இவன் எங்கிருந்து வந்தான்?
என்னண்ணே என்னமோபோல ஆயிட்டே? வருத்தப்படறியா? சரி அந்தக் காசைக் கொடு. போய் ரெண்டு பன்னும் பார்சல் டீயும் வாங்கிட்டு வாரேன். ரென்டுபேரும் திம்போம். - போண்டா பாய் கடைக்குக் கிளம்பினான்.
அவனைப் பார்த்ததும் கிளப்புக்கடை பாய் முகத்தில் புன்னகை விரிந்தது. வேன் மார்க்கெட்டில் நாணயமானவர்கள் இவனும் இவன் முதலாளியும் என்ற எண்ணம் பாய்க்கு உண்டு. . தின்ன கணக்கை ஏமாற்றிச் சொல்லுபவர்கள் இடையே தான் கணக்கை விட்டுவிட்டாலும், உள்ளதைச் சொல்லி காசை எண்ணி வைப்பவன் கிட்டா.
வாடா போண்டா! காலேலருந்து குந்தின இடம் மாறாம நீயும் உன் முதலாளியும் பெருசா திட்டம் போட்டுட்டு இருந்தீங்க! ஏதும் அமெரிக்கா ரஷ்யா மேல படையெடுக்கப் போறிங்களா? அப்படின்னா சொல்லுங்கடா.. என் கடைக்கு லீவு உட்டுர்றேன்! - தாடிக்குள் பாயின் சிரிப்பு தெரிந்தது.
இதுல ஒரு பார்சல் டீ... ரெண்டு பன்னு! - காசையும், பாட்டிலையும் கல்லாவின் மீது வைத்த போண்டா முகத்தில் பசி வாட்டம் தெரிந்தது. கல்லாவை விட்டு எழுந்த பாய் பாய்லரிடம் போகவில்லை. உள்ளே குஸ்கா அண்டா வைத்திருந்த ஸ்டாலுக்குப் போனார். நிறைய குஸ்காவை அள்ளி வைத்து, கூடவே அவித்த முட்டையையும் வைத்து இரு பார்சல்களைக் கட்டினார்.
''இந்தா! எடுத்துட்டுப் போய் துன்னுங்க. இன்ஷா அல்லா கையில் காசு வரும்போது கொடுத்தா போதும்! - பரிவுடன் சொன்னார் பாய்!
இஞ்சப் பார்றா.. என்ன பாய்? இன்னிக்கு குஸ்கா தங்கிப் போச்சா? கடனுக்கு எங்க தலையில் கட்டுறிங்க! இப்போதான் ஊட்டுலருந்து சோறும் நாட்டுக்கோளி கொழம்பும் வந்துச்சு. ஃபுல் கட்டு கட்டினோம். செரிமானத்துக்கு டீ வாங்க வந்தோம். - குஸ்கா பொட்டலங்களில் கண்கள் ஆவலாகப் படிந்தாலும் விட்டுக்கொடுக்காமல் சொன்னான் போண்டா.
அட நேத்துப் பொறந்த இப்லிசு! மொசப் புடிக்கிற நாய் மூஞ்சப் பாத்தா தெரியாதா? செரிமானத்துக்கு டீ. சரி.. பன்னு எதுக்குடா? இம்புட்டுப் புள்ளையிலருந்து கெளப்புக்கடையில் இருக்கேன். கொலப்பட்டினி கிடக்கறவன் மொகற எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். உன் கண்ணெதிரே ஒரு உயிர் பட்டினியால் வாடும்போது அதன் துன்பம் தீர்க்கும் வாய்ப்பைத் தவற விடாதேன்னு எங்க மார்க்கம் சொல்லுது. கெவுருவ கேசம்லாம் பாக்காம பொட்டலத்த எடுத்துட்டுப்போ சொல்றேன்! - பாய் சற்று கடுமையாகவே சொன்னார்.
பாய்! என் முதலாளி பத்திதான் உங்களுக்குத் தெரியும்ல்ல? கடனுக்கு சோறு வாங்கி திங்கறதைவிட பட்டினி கிடந்து சாவலாம்ன்னு சொல்லுவாரு. ஒருநாள் கடன்ல கிடைச்சுட்டா உழைக்கிற உத்வேகம் குறைஞ்சுடும்ன்னு அவர் எண்ணம். குஸ்கா வேணாம் பாய். டீயும் பன்னும் குடுங்க. முடிஞ்சா எங்களுக்கு நல்ல சவாரி கிடைக்கணும்ன்னு உங்க அல்லா சாமிகிட்ட வேண்டிக்குங்க. அது போதும். - சிறுவனின் பேச்சுக்கு மறு சொல் அளிக்க இயலாத பாய் மௌனமாக பாய்லரடிக்குப் போனார். டீத்தூள் மாற்றி, நிறைய பால் ஊற்றி, சீனி தூக்கலாகப் போட்டு கள்ளிச்சொட்டு போல டீ தயாரித்தார். 350 மிலி பிராந்தி பாட்டில் நிறைய ஊற்றித் தன் அன்பைக் காட்டினார்.
___________________________
வைகைக் கல்லூரி மாணவர்கள் விஜயும், கருணாசும் வண்டி வாடகைக்குப் பிடிக்க வேன் மார்க்கட்டுக்கு வந்தனர். கண்ணுக்கு பளிச்சென்று பட்ட வண்டியின் டிரைவர் ஒருவரிடன் சென்று சேதி சொன்னார்கள்.
நாளான்னிக்கு வைகைக் கல்லூரியில் இருந்து கொளுக்கு மலை சவாரி போணும். 10 நாள் வெயிட்டிங் பண்ணி பிக்கப் பண்ணிக் கொண்டாரணும். என்ன கேக்கறிங்க?
விஜய் சொன்ன விவரங்களைக் காதில் வாங்கிய கிட்டா ஆர்வமானான். பொதுவாக யார் சவாரியையும் தட்டிப் பறிக்கும் ஆர்வம் அவனுக்கு இருக்காது. ஆனால் இந்தச் சவாரி தனக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என ஏங்கினான். இதற்கு பணம் தாண்டிய ஒரு காரணமும் இருந்தது.
விஜய் அணுகிய ஓட்டுநர்கள் எவரும் சாதகமான பதிலைச் சொல்லவில்லை. ஒன்று அதிக வாடகை கேட்டார்கள். அல்லது, 10 நாள் வெயிட்டிங்குக்கு மறுத்து விட்டார்கள். பேச்சு வார்த்தை தோல்வியில் முடியவே, விஜய் பைக்கை ஸ்டார்ட் செய்தான். பின்னால் ஏறப்போன கருணாஸின் கண்களில் பட்டது கிட்டாவின் வண்டி. விஜயின் காதைக் கடித்தான். ஆர்வமின்றி கிட்டாவின் வண்டியைப் பார்த்த விஜய், ''இதை புக் பண்ணிட்டுப் போனா நம்மளக் கழுவி ஊத்துவானுகடா! தேவையா இதெல்லாம்?'' என்றான்.
''எந்தப் புத்தகத்தையும் அதன் மேல் அட்டையைப் பார்த்து மதிப்பிடாதே மாப்ள!'' - கருணாஸ் வாயிலிருந்து அரிதாக எப்போதாவது பெரிய வார்த்தைகள் வரும்.
டேய்.. டேய்..நிறுத்து! உன் தத்துவத்தையெல்லாம் கேக்குறதைவிட, அந்த வண்டிய புக் பண்ணிட்டு அவனுககிட்ட பாட்டு வாங்கறதே பெட்டர். வா. போய்ப் பேசுவோம்!
விவரம் கேட்ட கிட்டா சொன்னான். ''25,000 ரூவா கொடுங்க தம்பி. சந்தோஷமா போயிட்டு வந்துடலாம்! எல்லா செலவும் என்னுது! ''
என்னாது! கால் லெச்சமா? செத்தவன் கையில் வெத்தலை கொடுத்த மாதிரி ஒரு வண்டியை வச்சுக்கிட்டு இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியல? - கருணாஸ் கேட்டான்.
செத்த முன்ன நீங்க பேசின ஆளுக பூரா முப்பதாயிரத்துக்கு கொறைஞ்சுருக்க மாட்டாங்க. சரியா? போகவர 400 கிலோ மீட்டர். 20 ரூவா வீதம் 400 கிலோ மீட்டருக்கு எட்டாயிரம் ரூவா. வெயிட்டிங், டிரைவர் பேட்டா, டோல் எல்லாம் சேர்த்து முப்பதாயிரம் சொன்னாங்களா? நான் குறைச்சுதானே கேக்குறேன்? காலேஜ் புள்ளைகளா இருக்கீங்க. ஒரு ரெண்டாயிரம் குறைச்சுக்கங்க. 23,000க்கு சல்லிக்காசு குறையாது! - திட்டவட்டமாகச் சொன்னான் கிட்டா!
சரிங்க! எங்களுக்கு சம்மதம். ஆனா வண்டி 20 பேரை சுமந்துகிட்டு ஹில்ஸ் ஏறுமா? - விஜய் சந்தேகம் தெரிவித்தான்.
எஃப்.சி நெருங்குது. அதான் பெயிண்ட் டல்லா இருக்கு. உள்ளப் போய்ப் பாருங்க. புஷ்பேக் சீட், மியூசிக் சிஸ்டம், டிவி எல்லாம் இருக்கு. அழச்சுட்டு போய் பத்திரமா கொண்டுவந்து சேர்க்கறது என் பொறுப்பு. ஒருநாள் ரெண்டுநாள் கூடக்குறைச்சல் ஆனாலும் எக்ஸ்ட்ரா பணம் கேட்க மாட்டேன். நம்பிக்கை இருந்தா அட்வான்ஸ் கொடுங்க. இல்லாட்டா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இன்னொரு வண்டி இப்போ வரும். அதையும் விசாரிச்சுட்டுப் போங்க!
வண்டியைவிட உங்க பேச்சு நல்லா இருக்கு ட்ரைவர். உங்க பேர் என்ன?
கிருஷ்ணா!
ஆஹா.. ஆறு விரல் கிருஷ்ணா ராவா நீங்க? நல்லவேளை ட்ரைவராப் போனீங்க. எங்களை மாதிரி கம்ப்யூட்டர் இஞ்சினீயர் ஆயிருந்தா உங்களுக்கு எக்ஸ்ட்ரா கீ போர்ட் வைக்கணும். நாதஸ்வரம் புல்லாங்குழல் வித்வானா இருந்தா வாத்தியம் ரெம்ப லாங்கா தயாரிக்கணும்.. - கருணாஸ் கலாய்த்தான்.
என்னங்க சொல்றாரு இவர்? - விஜயை விசாரித்தான் கிட்டா.
உங்களுக்கு எக்ஸ்ட்ரா விரல் போல இவனுக்கு எக்ஸ்ட்ரா வாய்! கண்டுக்காதீங்க. இவனைக் கண்ட்ரோல் பண்ண வேற ஆள் இருக்கு. அதும் நம்மளோட டூருக்கு வருது. அது கவனிச்சுக்கும். - முன்பணமாக ரூ. பத்தாயிரத்தைக் கொடுத்து டைரியில் எழுதிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு புறப்பட்டனர் மாணவர்கள்.
என்னண்ணே நீ? 25000-லயே நின்னுருக்கலாம்ல்ல? தேவையில்லாம இன்னும் ஏன் ரெண்டாயிரத்தைக் குறைச்சே? - அதுவரை வாய் மூடியிருந்த போண்டா கேட்டான்.
அவங்க காசே தரலன்னாலும், கடனுக்காவது டீசல் அடிச்சுக்கிட்டு ஓசியாவே இந்த சவாரிக்குப் போயிருப்பேண்டா! நான் இந்த சவாரிக்கு போயே தீரவேண்டிய அவசியம் ஒன்னு இருக்கு! - கிட்டாவிடமிருந்து சூளுரையாக பதில் வந்தது.
அண்ணே.. ஓசிச்சவாரியா? என்ன சொல்றே?
அதெல்லாம் உனக்குப் புரியாது. இதில ஏழாயிரம் இருக்கு. ஐயாயிரத்தை சேட்டு ஆஃபீஸ்ல கட்டிடு. மீதியை இந்த மாசத்துக்குள்ள தந்துடறோம்ன்னு சொல்லு. ரெண்டாயிரத்தை உன் ஊட்டுல குடுத்துடு. முதல்ல ஊட்டுக்குப் போய் சாப்ட்டுட்டு அப்புறம் சேட்டு ஆஃபீசுக்குப் போனாப் போதும்!
______________________________
மறுநாள் காலை..
மாணவர்கள் எல்லோரும் சித்ரா வீட்டுக்கு வந்தனர். மூத்த அக்கா வைதேகி, தையல் மெஷினில் வேலையாக இருந்தாள். எல்லோரையும் பார்த்து முகம் மலர்ந்தாள். வாய் நிறைய வரவேற்றாள்.
வாங்க.. எல்லாரும் வாங்க.. நீங்க வருவீங்கன்னு தங்கச்சி சொன்னுச்சு!
''பெரிய சமஸ்தானம்! புலவர்களுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுக்கப் போகுது. வக்கு இல்லாட்டாலும் வரவேற்பு பலமா இருக்கு. - ராதிகா தன் காதில் கிசுகிசுத்ததை அனிதா ரசிக்கவில்லை.
அனைவரையும் உள்ளே அழைத்துப்போய் கிடைத்த ஆசனங்களில் அமர வைத்தாள் வைதேகி. சூர்யா, ஜோ, அனிதா போன்றோர் கௌரவம் பார்க்காமல் தரையில் உட்கார்ந்தனர்.
தெரு பூரா இரவல் சேர் வாங்கியிருப்பீங்க போல! ஒவ்வொன்னும் ஒரு கலரா இருக்கு! - ராதிகா ஏளனமாக நொடித்தாள்.
கொஞ்சமாவது மனுஷத்தன்மையோட நடந்துக்கோ ராதிகா - சிவா சன்னமாக வெடித்தான்.
வைதேகி போய் விவரம் சொல்ல, கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த சித்ரா வந்து எல்லோரையும் வணங்கி வரவேற்றாள். ராதிகாவுக்கும் தனியாக ஒரு வணக்கம் சொல்லி வரவேற்றாள். ''மாமா சாப்ட்டுட்டு இருக்காங்க. இப்போ வந்துடுவாங்க!''
வைதேகி ஒரு ட்ரேயில் எல்லோருக்கும் காஃபி கொண்டுவந்தாள். டம்ளரின் சைஸைப் பார்த்து ராதிகா சொன்னாள்.. '' காஃபி கொஞ்சமா இருக்கும் போலிருக்கு. பாய்ஸுக்கு மட்டும் கொடுங்க. எங்களுக்கு வேண்டாம். பாவம் அவங்களுக்காவது வாய் நனையட்டும்!''
காஃபி கொடுக்கறது கர்ட்டசிக்கு ராதி! வயித்துப்பசிக்கு இல்ல. நீங்க எல்லோருக்கும் கொடுங்க சிஸ்டர். நல்லாருக்கும் போல. வாசனை தூக்குது! - சித்ராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே வைதேகியிடம் சொன்னான் சரத். அவனும் ஜால்ரா அடிப்பதைக் கண்டு ராதிகா இன்னும் பழுத்தாள்.
ஆர்த்திப் பாப்பா.. அது என்னாது.. உனக்கு மட்டும் சொப்புல காப்பி குடுத்திருக்காங்க? - கணேஷ் கலாய்த்தான்.
மாப்ள.. உன் ஆளு கையில இருக்குல்ல? அதான் இம்புட்டுக்கானும் தெரியுது! - கருணாசும் எண்ணெய் ஊற்றினான்.
ஏதோ பேசணும்ன்னு வந்திருக்கீங்களாம்.. என்ன விஷயம்? - மாமன்காரன் ஜனாவின் குரல் அனைவரையும் திடுக்கிட வைத்தது!
Owner Phone : 9842XXX6XX
Comments
Post a Comment