சித்ரா' வதை - 2
வைகை பொறியியற் கல்லூரிப் புல்வெளி..
தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்து சுரேஷ் தொடர்ந்து பேசினான்.. '' ஃப்ரெண்ட்ஸ்.. நாம 20 பேர் டூர் போகப்போறோம்.நிர்வாக வசதிக்காக ஒரு அமைப்புக்குழு நியமிக்கலாம்ன்னு சின்ன யோசனை. பயணக்குழுவுக்கு நம்ம சிவா தலைவனா இருப்பான். நான் செயலாளர். அனிதா பொருளாளர். என்ன சொல்றிங்க?
குழு நியமிக்கறது சரிதான்! ஆனா ஒரே குடும்பத்துக்கு ரெண்டு பதவியா? நீ செயலாளர். உன் ஆளு அனிதா பொருளாளரா? இது நியாயமில்லே! - அஜித் வேடிக்கையாகக் கலாய்த்தான்.
நாங்க இன்னும் குடும்பம் ஆகலேடா பாவி! உன் வாக்கு பலிக்கட்டும். அஜீ சொல்றதும் சரிதான். ஏத்துக்கறேன். பொருளாளராக ஷாலுவைப் போட்டுடலாம். எல்லோரும் அவகிட்ட பைசாவைக் கட்டிடுங்க ப்ளீஸ்!
செயலாளரே! நான் ஒரு ரோசனை சொல்லவா? - கருணாஸ் கேட்டான். கூட்டம் ஆவலாகக் கவனித்தது. அவனும், கணேஷும் குரூப்பின் நிரந்தரக் காமெடியன்கள். ''பயணக் குழுவுக்கு பாதுகாப்பு அதிகாரி வேணும்ன்னா சொல்லுங்க பாஸ்! நம்மகிட்ட ரெண்டு பயில்வான் ரங்கநாயகிகள் இருக்காங்க!''
அவன் தங்களைத்தான் சொல்கிறான் என்று ஆர்த்திக்கும், க்ரேஸுக்கும் புரிந்துவிட்டது. ''டேய் கருவாயா.. அடங்கு!'' என அடிக்குரலில் எச்சரித்தாள் க்ரேஸ்!
கருணாஸ் சொன்னதைக் கேட்டு கணேஷுக்கும் உற்சாகம் பற்றிக்கொண்டது. '' ஆமாம் சுரேசா! ரெண்டும் ஹெவிவெயிட் சாம்பியன்! இந்தியாவையே காப்பாத்துவாங்க. அமெரிக்காகாரன் அணுகுண்டு போட்டா நாம ஆர்த்தி குண்டை போட்டுக் காலி பண்ணலாம். சீனாக்காரன் கெமிக்கல் குண்டு போட்டா நாம க்ரேஸ் குண்டை அவன் தலையில் போடலாம்! குண்டு ரெண்டு வச்சிருக்கோம்.. வெடிகுண்டு ரெண்டு வச்சிருக்கோம்! - பாடவே ஆரம்பித்துவிட்டான் கணேஷ்!
''டீ ஆர்த்தி! ஊசிப்பயலை கொஞ்சம் கை பாரு!'' - க்ரேஸ் உத்தரவிட, உடனே களம் புகுந்தாள் கணேஷின் காதலி. வலது கை முஷ்டியை இறுக்கி, ஒரு இடியை கணேஷின் முதுகில் இறக்கினாள்.
''மச்சான்.. சாச்சுப்புட்டா மச்சான். மூச்சு உட முடியலடா! ஏண்டி பாவி மவளே.. அது என்ன கையா கர்டரா? காலேசுக்கு வந்தா கையை எடுத்துட்டு வருவாங்க; நோட்டு புத்தகம் வைக்க பையை எடுத்துட்டு வருவாங்க.. நீ என்னடி கர்டர தூக்கிட்டு வந்து அடிக்கறே? விதவையாப் போயிடுவேடி வெவரம் கெட்டவளே.. மச்சான்.. மடியக் காட்டுடா.. கண்ணை இருட்டுது. கொஞ்சம் சாஞ்சுக்கறேன். பத்து நிமிஷம் பாரு. உசுரு இருந்தா கைத்தாங்கலா க்ளாசுக்கு அழச்சுட்டுப் போ. இல்லன்னா ஒறமுறைக்கு சொல்லிவிட்டுடு மச்சான். எனக்கு உன்னைவிட்டா ஆளு இல்லடா! - கருணாஸின் மடியில் சாய்ந்துவிட்டான் கணேஷ்!
ஆர்த்தியும் க்ரேஸும் சிரித்தவாறு ஹை-ஃபை தட்டினர். ''சிங்கத்த சிதைச்சுட்டு செலிப்ரேட்டா சிறுக்கிகளா? - கருணாஸ் வெம்பினான்.
என்னாது சிறுக்கிகளாவா? - க்ரேஸ் முஷ்டியை உயர்த்த, ''இல்லத்தா..தப்பா புரிஞ்சுகிட்ட. சிரிக்கிறீகளான்னு கேட்டேன்!'' - கருணாஸ் பின்வாங்கினான்.
மச்சான்.. நீ ரெம்ப சூதானம்டா! இந்த வெவரம் இல்லாமத்தான் நான் நாக்கவுட் ஆகிக் கெடக்கேன்! - கணேஷ் புலம்ப, மாணவர் கூட்டம் ரசித்துச் சிரித்தது!
ஹா..ஹா.. சரியான கோமாளிப் பசங்க.. இவனுக இல்லாட்டாலும் நமக்குப் பொழுது போகாது! சரி.. நாம டாபிக்குக்கு வருவோம். விஜய்.. சாயந்தரம் காலேஜ் விட்டதும் நீயும் கருணாஸும் போய் வேன் புக் பண்ணிடுங்க. நாம டூர் அதிலதான் போப்போறோம்! - சுரேஷ் அறிவித்தான்.
என்னது? வேன்லயா? சரத், சூர்யா போயிட்டு வந்த மாதிரி பைக்ல போறோம்ன்னுல்ல நினைச்சேன்! அவங்கவங்க ஜோடியோட ஜாலியாப் போயிட்டு வருவோமே பாஸ்? - விஜய் சந்தேகம் கேட்டான்.
ஆம்பளப் பசங்கன்னா மாத்தி மாத்தி ஓட்டிட்டுப் போகலாம். போக வர 350 கிமீ ஆகும் விஜய். பொம்பளப் புள்ளைங்க தாங்காது. வாடிப் போயிடுவாங்க. அதோட விஜய்க்கு கம்பெனி இல்லேல்ல? எல்லாரும் பேசிச் சிரிச்சுக்கிட்டு ஒன்னா போக வேன் தான் சரி!
ம்ம்ம் சரி பாஸ்! 10 நாள் ப்ரொக்ராம் ஆச்சே! அத்தனை நாளுக்கு வெயிட்டிங் சார்ஜ் கேட்பாங்க.. நம்மள ட்ராப் பண்ணிட்டு வந்துட்டு அப்புறம் 10 நாள் கழிச்சு அழைக்க வர்ற மாதிரி பேசட்டுமா?
வேணாம் விஜய்! வண்டியும் நம்மகூட இருக்கட்டும்! வெயிட்டிங் சார்ஜும் டபுள் பிக்கப் சார்ஜும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கும். ஒருவேளை அங்க இருக்கறது நமக்கு போர் அடிச்சுதுன்னா உடனே கிளம்ப வண்டி இருந்தாதான் வசதி. அந்த ஊர்ல அவசரத்துக்கு எதுவும் கிடைக்காது!
சரி பாஸ்! அப்படியே செய்துடறேன்!
குட் விஜய்! அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்! நாளைக்குக் காலேல கொஞ்சம் சீக்கிரமா வீட்லருந்து புறப்பட்டு வந்து வாதவூர் அனிதா வீட்ல அசெம்பிள் ஆகிடுங்க. சித்ராவோட மாமாகிட்ட பர்மிஷன் வாங்க எல்லோரும் போறோம்!
''நான் வரல சுரேஷ்! நீங்க போயிட்டு வாங்க'' - ராதிகா சொன்னாள்.
இங்க பாரு ராதிகா! இன்னும் நாலு மாசமோ அஞ்சு மாசமோதான் நாம ஒன்னா இருக்கப் போறோம். அப்புறம் யார் யார் எங்கேயோ! இந்த கோஷ்டி சேக்கறது, ஒருத்தரை மட்டும் ஒதுக்கறது இதெல்லாம் வேண்டாமே! நீயும் வர்றே.. டாட்! - சிவா திட்டவட்டமாக சொல்லிவிட்டான்.
சிவா.. முதல்ல சித்ராவுக்கு டூர் வர விருப்பம் இருக்கான்னு தெரிஞ்சுக்கணும். - அனிதா யோசனை தெரிவித்தாள்.
அதைச் செய்ய உன்னைவிட பெஸ்ட் யார் அனி? லஞ்ச் அவர்ஸ்ல கேட்டுடு. நாளைக்குக் காலேல சுரேஷ் சொன்ன மாதிரி அவ வீட்டுக்குப் போற ப்ரொக்ராம் கன்ஃபர்ம் பண்ணிடலாம்! - சிவா விளக்கினான்.
கல்லூரி துவங்குவதற்கான மணி ஒலிக்கவே அனைவரும் எழுந்தனர். கல்லூரி வளாகத்துக்கு வராமல், சரத்தும் சூர்யாவும் ஒதுங்குவதைக் கண்டாள் ஜோதிகா. தன்னவனைத் தனியே அழைத்து கேட்டாள். ''க்ளாஸுக்கு வரலியா சூர்யா?''
நீ போ ஜோ! கொஞ்சம் சரத்கிட்ட பேசவேண்டி இருக்கு.
இங்க பாரு சூர்யா... சரத் கூட பழக்கத்தைக் குறைச்சுக்கோ. அவன் ஆள் சரியில்லே! பொம்பளப் புள்ளைகள பாக்குற பார்வை தப்பா இருக்கு!
சரி ஜோ! ஒரு முக்கிய தாக்கல் சொல்லணும். சொல்லிட்டு வந்துடறேன். போயிட்டே இரு!
ஜோ திரும்பி நடந்தாள். அவள் வருகைக்காக ஷாலினி காத்திருந்தாள். இருவரும் இணைந்து வகுப்பறையை நோக்கி நடந்தனர்.
என்ன ஜோ டல்லா இருக்கே?
இந்த லூஸு சூர்யா கவலைதான் ஷாலு! அந்த சரத் கூடச் சேர்ந்து வீணாப் போறான்.
ஆமாப்பா. சரத் என்னமோ பெரிய ஆணழகன்னு சீன் காட்டறான். ஜிம் பாடின்னா எல்லாரும் மயங்கிடுவாங்கன்னு நினைக்கிறான். ரெண்டு பொம்பளப் புள்ளைக பேசிட்டு இருந்தா நடுவுல வந்து உக்காந்து வழிவான்.ஒரு தடவை பேட் டச் பண்ணினான்ப்பா! அஜீகிட்ட சொன்னேன். அதிலிருந்து சரத் கூட பேசறதை குறைச்சுக்கிட்டான்.
சூர்யாவையும் கண்ட்ரோல் பண்ணனும். சரி ஷாலு! இந்த ராதிகா ஏன் சித்ராவைக் கரிச்சுக் கொட்டறா?
அதுவா ஜோ? உனக்குத் தெரியாதா? ராதிகாவும், சிவாவும் மேலூர்ல ஒரே தெருவில் இருக்காங்க. தூரத்து உறவும்கூட. சிவாவுக்கு லைன் போட்டுப் பார்த்தா. கதை ஆகல. அவன் இன்ட்ரெஸ்ட் சித்ரா மேல இருக்கு. அதனால இவளுக்கு கடுப்பு! அப்புறம்தான் ராதிகா சரத்தைப் பிடிச்சா.
சித்ரா விவகாரத்தில் ஒரு பையன் செத்துப்போனான்னு ஒருதடவை ராதிகா சொன்னாளே..
நீ லேட்டரல் என்ட்ரில்ல? அதான் சில விஷயங்கள் உனக்குத் தெரியல்ல ஜோ! கோர்ஸ்ல சேர்ந்தப்போ, சித்ராவோட மாமாதான் காலேஜ்க்கு கொண்டுவந்து விட்டு, அழச்சுட்டுப் போவார். அப்போ நந்துன்னு ஒரு பையன் லைப்ரரி புக் விஷயமா சித்ராகிட்ட பேசிட்டு இருந்தான். அதைப் பார்த்த ஜனா அவனை அறைஞ்சுட்டார். அவனுக்கு அவமானமாப் போயிடுச்சு. மறுநாள் நந்து தூக்கு போட்டுக்கிட்டான்!
அடப்பாவமே!
____________________________
ஏண்டா சரத்? மறுபடியுமாடா அந்த எழவெடுத்த ஊருக்குப் போகப்போறோம்? - சூர்யா கடுப்பாகக் கேட்டான்.
நத்திங் டு ஒரிடா! நேத்துதான் அந்த பங்களா கேர் டேக்கரோட பேசினேன். பயப்பட ஒன்னும் இல்லே; தாராளமா வாங்கன்றான்!
என்னமோப்பா! எனக்கு ஒன்னும் சரியாப் படல! மனசு கிடந்து அடிச்சுக்குது! ஏதோ சரியில்லேன்னு உள்ளுணர்வு சொல்லுது..
அதெல்லாம் விட்டுத்தள்ளு. 10 குட்டிகளோட 10 நாள் எஞ்சாய் பண்ணப்போறோம். கண்ணுக்கு குளிர்ச்சியா பொழுது போகும். ஒவ்வொருத்தியும் எப்படி ட்ரெஸ் பண்ணப்போறான்னு பாரு! இந்தி நடிகை கெட்டா! நீ வேணா பாரு! நாளைக்கு மதியானத்துக்கு மேல எல்லாக்குட்டிகளும் காலேஜுக்கு மட்டம் போட்டுட்டு ப்யூட்டி பார்லருக்கு போவாளுக. த்ரெட்டிங், பெடி க்யூர், மனிக்யூர், வாக்ஸிங்ன்னு பண்ணிட்டு வந்து அசத்துவாளுக!
நீ சொல்ற 10 குட்டியில் என் ஜோவும் இருக்கா! பார்த்துப் பேசு சரத்!
ஓ சாரிடா! நான் அப்படி மீன் பண்ணல; அவங்கவங்க ஆள்களை விதம் விதமா ரசிக்கலாம்ன்னு சொல்ல வந்தேன். இன்னும் சொல்லப்போனா என் ஆர்வம் முழுக்க சித்ரா மேலதான்!
அப்போ ராதிகா? உனக்கு பைக் வாங்கித் தந்திருக்கா. பாக்கெட் மணி தரா! அவள விட்டுட்டு சித்ராவை ரசிப்பது தப்பில்லியா சரத்?
ராதிகா மட்டும் ஒழுங்கா? இன்னும் அவளோட நேசம் சிவா மேலதான் இருக்கு. இன்னிக்கு அவன் கண்ணசைச்சா போதும். என்னை விட்டுட்டு அவன் பின்னால ஓடிடுவா! சித்ராதான் தனிக்குதிரையா சுத்திக்கிட்டு இருக்கா. அட் எனி காஸ்ட், இந்த டூர் முடிவுக்குள்ள அவளை முடிச்சுடுவேன். இதுக்கு எவ்ளோ தீவிரமாகவும் போகத் தயார்! - சரத்தின் குரலில் இருந்த உறுதி சூர்யாவை மிரட்டியது. நல்லவேளை.. ஜோ தப்பினாள் என்ற நிம்மதியையும் தந்தது!
____________________________
மதிய உணவு இடைவேளை..
நீங்க எல்லாம் சந்தோஷமா போயிட்டு வாங்க அனி! என்கிட்ட கொடுக்க அவ்ளோ பணம் இல்லே. வர்ற மனநிலையிலும் இல்லே! - சித்ரா திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.
ஏண்டி அப்படிச் சொல்றே? இன்னும் கொஞ்சநாள்ல நாம மூலைக்கு ஒருத்தரா போகப்போறோம். ஒரு 10 நாள் எல்லாக் கவலையையும் மறந்துட்டு நிம்மதியா இருந்துட்டு வருவோமே! மாணவப் பருவமும், இதே தோழமையும் இனியொருமுறை கிடைக்குமா என்ன? காசப்பத்திக் கவலைப்படாதே. நாங்க போட்டுக்கறோம்!
அனி.. என் குடும்ப சூழ்நிலை உனக்கு நல்லாத் தெரியும். இருந்தும் வரச்சொல்லிக் கேட்கறே பாரு..
தெரியும் சித்ரா! அதான் எனக்கு வியப்பா இருக்கு. நீ நல்லாப் படிச்சிருக்கே! ஓரளவுக்கு உலக மாற்றமும் தெரியும். இருந்தும் உன் மாமாவின் ஒடுக்குமுறைக்கு பணிஞ்சு போறது ஏன்?
இன்னிக்குத் தேதிக்கு எங்க குடும்பத்துக்கு ஆண் துணைன்னு இருக்கறது மாமா மட்டும்தான்! அவரையும் உதறித் தள்ளிட்டு நாங்க என்ன பண்ணமுடியும் அனி? நல்லவரோ கெட்டவரோ.. எவனும் எங்ககிட்ட தப்பா நடந்துக்காம அந்த முள்வேலிதான் பாதுகாக்குது! அவரோட முரட்டுத்தனம்தான் காவலா நிக்குது! நாலு பொட்டப்புள்ளைங்க. அம்மாவோ வெவரம் இல்லாதவங்க. நான் இருக்கேன் உங்களுக்குன்னு வந்து நின்னது மாமா ஒருத்தர்தான்.
அதுக்கு அவர் கேட்கும் கூலி ரொம்ப ஜாஸ்தியா உனக்குத் தெரியலியா சித்து?
தெரிஞ்சு.. என்ன பண்ணமுடியும்? எனக்கு மேல ரெண்டு பேர் இருக்காங்க. அவங்களைக் கரையேத்தும் பொறுப்பை அவர்தானே ஏத்துக்கிட்டிருக்காரு? மாமாவை விட்டா எங்களுக்கு கதி இல்லே அனி!
ஏன் இல்லே? உன் மேல சிவா உயிரையே வச்சிருக்கான். உனக்காக எதுவும் செய்வான். அவன்கிட்ட இருக்கும் பணத்துக்கு, உன் அக்காக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கறது பெரிய விஷயமே இல்ல. நீ துணிஞ்சு முதல் அடி எடுத்து வச்சு வெளில வா. மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம். இது வெறும் உணர்ச்சிவசப்பட்டு பேசற வார்த்தை இல்லேடி! நாங்க எல்லாரும் உக்காந்து பேசி முடிவெடுத்தது. என்ன சொல்றே?
தேன்க்ஸ் அனி! நீ சொல்றது உண்மையா இருக்கலாம்; இல்லே அப்படி நீ உறுதியா நம்பலாம். நாளைக்கு நடக்கப்போறது யாருக்குத் தெரியும்? என்னைக் கட்டிக்க சிவா அப்பாம்மா ஒத்துக்கலாம். ஆனா என் அக்காள்களை கரையேத்த ஒத்துக்கணும்ன்னு எதிர்பார்க்கலாமா? அது முறையா? ஒருவேளை ஏதோ அதிசயம் நடந்து அதுக்கும் சிவா ஏற்பாடு பண்றாருன்னே வச்சுப்போம். அப்புறம் என் மூத்த அக்கா வைதேகி கதி? அதுக்கு என்ன தீர்வு வச்சிருக்கே? நான் வெளில போயிட்டேங்கற கோவத்தில் மாமா வைதேகி அக்காவைத் துரத்திவிட்டுட்டாருன்னா என்ன செய்வா? அதுக்கும் ஒரு மாப்பிள்ளை பார்ப்பாரா சிவா?
அதுக்காக..
அதுக்காக, நான் ஒருத்தி விட்டுக்கொடுக்கறதில் தப்பில்லே! இப்போ இருக்கற செட்டப்பை விட சிறந்த ஒன்னு இல்லவே இல்ல. என் குடும்ப நன்மைக்காக என் வாழ்க்கையை நான் சந்தோஷமா தியாகம் பண்றேன். ஐ ஹாவ் நோ ரிக்ரெட்ஸ் அட் ஆல்!
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சித்து! உன் விருப்பப்படி செய்! மூனாவது மனுஷரா நாங்க எதுவும் சொல்லலாம். ப்ரச்னையில் கிடந்து உழலற உனக்குதான் அதன் தீவிரம் நல்லாத் தெரியும். எதைச் செய்தால் நல்லதுன்னு உனக்குதான் புரியும். அதை விடு. நீ எங்களோட டூர் வரணும்ன்னு எல்லோரும் பிரியப்படறோம். நீ வரலன்னா அந்த டூரையே கேன்சல் பண்ணிடலாம்ன்னு சுரேஷ்ட்ட சொல்லப்போறேன்!
என்னடி அனி இது பிடிவாதம்? அந்த டூரில் நான் வந்தால் என்னென்ன நடக்குமோன்னு பயப்படறேன்.
உன் மாமாவைத்தானே சொல்றே? அவரைக் கன்வின்ஸ் பண்றது எங்க பொறுப்பு! நாளைக்குக் காத்தால உன் வீட்டுக்கு நாங்க எல்லாரும் வரோம்!
ம்ம்ம்ம்.. எல்லாம் முன்கூட்டியே முடிவு பண்ணி நடக்குது போல! நான் சொல்ல என்ன இருக்கு? தலையெழுத்துப்படி நடக்கட்டும். நான் அவமானப்படறது என்ன புதுசா? உங்க இஷ்டம்போல செய்யுங்க!
தேன்க்ஸ்டி சித்து! - தோழியைக் கட்டிக்கொண்டாள் அனிதா!
(இதன் அடுத்த பகுதி, புதன் கிழமை வெளியாகும்!)
Comments
Post a Comment