சித்ரா வதை - 1
அன்பு உறவுகளுக்கு வணக்கம். கதை எப்படி இருந்தாலும் நீங்கள் கைவிடவே மாட்டீர்கள் என்னும் துணிவுடன், மீண்டும் ஒரு சிறுபிள்ளைத்தனமான கிறுக்கலுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். எப்போதும்போல உங்களின் ஆதரவு வேண்டும். கதைக்குள் செல்லலாம். வாருங்கள்..
வைகை பொறியியல் கல்லூரி. மதுரை.
முகவரி மதுரை என்று இருந்தாலும், கல்லூரி இருப்பதென்னவோ மேலூர் பக்கத்தில்தான்! இங்குதான் நம் நாயகர்கள் அனைவரும் இறுதியாண்டு பயிலுகிறார்கள். கல்லூரிப் பாடத்தைக் கற்றார்களோ இல்லையோ, காதல் பாடத்தை அப்பழுக்கில்லாமல் படிக்கிறார்கள். ஆளுக்கொரு இணையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தமாக இருக்கின்றனர். சித்ராவைத் தவிர!
கல்லூரி இருக்கும் தெற்குத் தெரு என்னும் ஊரில் இருந்து 10 கிமீ உள்ளடங்கி இருக்கிறது சித்ரா வசிக்கும் திருவாதவூர். மாணிக்க வாசகர் பிறந்த திருத்தலம். ஊரைக் காக்கும் ஈசன் பெயர் திருமறை நாதர். வேதநாயகி என்னும் ஆரணவல்லித் தாயார் உடன் உறைகிறாள். இதே ஊரில் இருந்து இன்னும் பத்திருபது பேர் அதே வைகை இஞ்சினீயரிங் காலேஜில் படிக்கிறார்கள். ''வாதவூர் வானரங்கள்'' என்ற வாட்சப் குரூப் வைத்துக் கலக்கும் இந்த குறும்புக் குழுவை தெரியாதோர் யாரும் இல்லை!
சித்ராவின் குடும்பம் ஒருகாலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள். அப்பா சங்கர் வெள்ளந்தி மனிதர். தன் நண்பர்கள் நாலைந்து பேரைச் சேர்த்துக்கொண்டு, பெரிய முதலைப் போட்டு தொழிலைத் தொடங்கினார். அவரது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்ட பங்காளிகள், நஷ்டக்கணக்கு காட்டி சங்கரை வெறும் கையோடு வெளியேற்றிவிட்டனர். ஏங்கிப்போய் வீட்டுக்கு வந்த சங்கர், தன் மனைவியின் மடியில் படுத்து அழுதுகொண்டே உயிரை விட்டுவிட்டார்.
சித்ராவின் தாய் பத்மா தன் கணவரைவிட அப்பாவி. நண்டும் சிண்டுமாக நான்கு பெண் குழந்தைகளுடன் தவித்தாள். கூடவே இருந்த தம்பி ஜனாவின் ஒத்துழைப்போடு ஜீவனம் ஓரளவுக்கு ஓடுகிறது. காலம் மெல்ல உருள்கிறது. மூத்த பெண் வைதேகியை தாய்மாமன் ஜனாவே திருமணம் செய்துகொண்டான். சித்ரா கடைக்குட்டி. ஜனா அவளை இஞ்சினீயரிங் படிக்க வைப்பதுகூட ஒரு திட்டத்துடன் தான்.
திருமணம் ஆகி ஆறேழு வருடங்கள் ஆகியும் வைதேகிக்கு குழந்தைகள் இல்லை. அடுத்தவர்கள் ஜானகி, சீதாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்யும் ஏற்பாட்டில் ஜனா ஈடுபட்டிருக்கிறான். இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்கப்போகும் சித்ரா ஒரு வேலையில் அமர்ந்து அக்காள்களின் கல்யாணத்துக்கு உதவவேண்டும். அப்படி அவர்களை இன்னும் சில ஆண்டுகளில் கரையேற்றிய பின்னரும், வைதேகி வயிற்றில் ஒரு புழு பூச்சி உருவாகவில்லை என்றால், சித்ராவை மணப்பான் ஜனா. இந்த ஒப்பந்தத்துக்கு வேறுவழியின்றி ஒப்புக்கொண்டுவிட்டாள் தாய் பத்மா.
இந்தநிலையில் நடைப்பிணமாக கல்லூரி சென்றுவரும் சித்ராவை உருகி உருகிக் காதலிக்கிறான் சிவா. மேலூரைச் சேர்ந்த ஒரு பணக்காரரின் பிள்ளை அவன். படிப்பில் கெட்டி. நல்ல மனசுக்காரனும்கூட. சிவாவின் கண்பார்வைக்காக எத்தனையோ பேர் காத்துக்கிடக்க, அவனது ஈடுபாடு என்னவோ ஜனாவின் எதிர்கால மனைவியின் மீதே இருக்கிறது.
காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கல்லூரிக்குள் நுழையப்போன சிவாவின் கண்ணில் பட்டாள் அனிதா. அவளும் அனிதாவின் ஊர்தான். இவளும் சித்ராவும் ஸ்கூட்டரில் கல்லூரிக்கு வந்து போவதில் நட்பு இறுகி இருந்தது. சித்ராவின் ஒரே தோழி அனிதா மட்டுமே. ஆனால் அனிதா கலகலப்பான ஆள் என்பதால் அவளுக்கு ஆண், பெண் நட்புகள் அனேகம். சுரேஷ் என்னும் மாணவனுக்கும் இவளுக்கும் உள்ள காதல் கல்லூரியில் பிரசித்தம்.
கல்லூரிக்கு முன்னே உள்ள புல்வெளியில் லாப்பியைப் பிரித்துவைத்து எதையோ ரசித்துக்கொண்டிருந்தாள் அனிதா. அவளருகே போனான் சிவா.
ஏய் அனி! குட் மார்னிங்.க்ளாஸ் போகாம இங்க என்ன பண்ணிட்டுருக்கே?
குமார்னிங் டா! ப்ராஜக்ட் லீவுக்கு எங்கேயோ டூர் போகணும்ன்னு நம்ம பசங்க சொல்லிக்கிட்டிருக்கானுக. அது சம்பந்தமா முடிவு எடுக்கணுமாம். மீட்டிங் இருக்கு. வெயிட் பண்ணுன்னு சொன்னானுக. அதான்! உக்காரு..
அனியின் அருகில் அமர்ந்த சிவா லாப்பியில் கண்ணை ஓட்டினான். ''என்ன பார்த்துட்டு இருக்கே?''
ஆண்டு விழா ப்ரொக்ராம்ஸ் சிவா! உன் ஆள் கடவுள் வணக்கம் பாடப்போறா பாரு! - அனி சொன்னதும் ஆவலோடு நெருங்கி ரசிக்கலானான். பாந்தமாக கட்டிய பருத்திப் புடவையில் வந்த சித்ரா இனிய குரலில் பாடிய ''ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா'' சுசீலாம்மாவை நினைவூட்டியது. விதம் விதமான நவீன உடைகளில் கலக்கும் பட்டாம்பூச்சிகளிடையே இன்றளவும் கைத்தறி புடவையுடன் கல்லூரிக்கு வரும் ஒரே மாணவி சித்ராதான். வேறு உடைகள் அணிந்தால் ஜனாவுக்கு பிடிக்காது.
ஏய் அனி! சித்ரா உன் டியரெஸ்ட் ப்ரெண்ட்தானே? என் மேட்டரைச் சொல்லி அவளோடு சேர்த்துவச்சு நீ வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடாதா?
ம்ம்.. நல்ல ஐடியா குடுக்குறாண்டா! அவ மாமனுக்கு மேட்டர் தெரிஞ்சா நான் வரலாட்டுல எடம் பிடிக்க மாட்டேன். சுடுகாட்டுலதான் எடம் பிடிக்கணும்! போவியா!
பாத்தியா பாத்தியா! செத்த முன்னாடி என் ஆள் பாடறான்னு சொன்னியே. இப்ப இப்படிச் சொல்றியே அனி!
இங்க பாரு சிவா! இதுதான் நம்ம தலையெழுத்துன்னு சித்ரா ஒரு மைண்ட் செட்டுக்கு வந்துட்டா. அனாவசியமா அவ உணர்வோட விளையாடாதே. அவங்க அவங்க தலையெழுத்துப்படிதான் நடக்கும். வீணா கனவு கண்டு வாழ்க்கையை வீணாக்கிக்காதே. அவ்ளோதான் சொல்லுவேன். தோ பாரு.. நம்ம வானரக் கூட்டம் வருது.. - தன் காதலன் சுரேஷைக் கண்டதும் அனிதா முகம் மின்னியது!
டேய் சிவா! இங்க என்னடா என் ஆளுகூட கடலை போட்டுக்கிட்டிருக்கே? - சுரேஷ் அதட்டினான்.
டேய்.. டேய்.. என்னையாடா இப்படிச் சொல்றே? அனி எனக்கு தங்கச்சிடா! நான் அப்படிப்பட்ட ஆள் இல்லேன்னு உனக்குத் தெரியாதா? - பதறி எழ முயன்ற சிவாவின் கையைப் பிடித்து இழுத்து இன்னும் நெருக்கி அமரவைத்தாள் அனிதா. ''டேய் சிவா! பீலிங்கக் கொறைடா. அவன் கலாய்க்கறான். சுரேஷுக்கு உன்னைப்பத்தியும் தெரியும். என்னப் பத்தியும் தெரியும்!'' - அனிதா சொன்னதும் சிவா ஆசுவாசம் பெற்றான்.
சிவாவுக்கு எல்லாரும் தங்கச்சிதான். ஒரே ஒருத்தியைத் தவிர! - கூட்டத்தில் நின்றிருந்த ராதிகா உதட்டைச் சுழித்தாள்.
சரி! நான் இந்தப் பக்கம் குந்திக்கறேன்! - அனிதாவின் இன்னொரு பக்கத்தில் பட்டறையைப் போட்டான் சுரேஷ். ''அடேய்களா.. அடீகளா.. எல்லாரும் அப்படியே குத்தவைங்க. முக்கியமான விஷயம் பேசணும்!'' - சுரேஷின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் வட்டம் போட்டனர்.
ப்ரென்ட்ஸ்! வரப்போற லீவுக்கு நாம போகப்போற இடம் கொளுக்கு மலை! அருமையான மலைவாழிடம் இது! - சுரேஷ் ஆரம்பித்தான்.
என்னாது? கொழுக்கட்டை மலையா? - குண்டு ஆர்த்தி வாய் பிளந்தாள்.
எப்பப்பாரு.. தீனி பத்தின நினைவுதான். வாயைச் சாத்து தீனிப்பண்டாரம்.. - கேலி செய்தான் கணேஷ்.
''கொளுக்கு மலை ஆர்த்தி! தேனி அல்லி நகரம் தாண்டி கேரளா பார்டர். மண்ணு, தண்ணி, மனுசங்க எல்லாம் இன்னும் மாசுபடாத இடம்! நம்ம சரத் இன்னும் சிலபேரோட சமீபத்தில் போயிட்டு வந்திருக்கான். அவந்தான், இப்படி ஒரு இடம் இருக்குன்னு சொன்னான். அங்க மொத்த ஜனத்தொகையே 100 பேருக்குள்ளதான். பெண்களுக்கு ரவிக்கை அணியும் பழக்கம் இல்லியாம்!'' - சுரேஷ் விளக்கினான்.
ஓ! லவுக்க போட மாட்டாங்களா? அப்புடிச் சொல்லு. அதான் பசங்க அங்க போணும்ன்னு அலையறிங்க! இதில் என்ன வைரமுத்து மாதிரி, மண்ணு, மனுசங்க, மாசுன்னு கவித்துவ பில்டப்பு நொன்னைங்களா?'' - சுரேஷின் முகவாயில் இடித்தாள் அனிதா! கூட்டம் கை தட்டியது!
கூட்டத்துல மானத்த வாங்காதே அனி! அந்த பென்லே கேசில் பங்களாவை ஓப்பன் பண்ணு. பசங்க பார்க்கட்டும்! - லாப்பியில் பிக்சர் ஃபோல்டரைத் திறந்து ஒரு ஜேபிஜியை சொடுக்கினாள் அனிதா. அமானுஷ்யமான தோற்றமுள்ள பெரும் மாளிகை ஒன்று திரையில் விரிந்தது. கிலி கலந்த கவர்ச்சி மனதில் நிறைய அனைவரும் வைத்த கண் மாறாமல் அந்த அரண்மனையைக் கண்ணுற்றனர்.
டேய் என்னடா இது.. பேய் பங்களா மாதிரி இருக்கு? - அரண்ட குரலில் வினவினான் கருணா! சரத்தைத் தனியே இழுத்துப்போன சூர்யா, ''என்ன மாம்ஸ்? மறுபடியுமா அங்க போகப் போறோம்? ஏற்கனவே போனப்போ என்ன நடந்துச்சு தெரியுமில்ல?'' என்று பதட்டத்துடன் வினவினான்.
'கம்முன்னு இர்ரா! எல்லாரும் பாக்கப் போறாங்க!'' - சரத் அசமடக்கினான்.
எதுக்கு சுரேஷ் இந்தப் படத்தைக் காட்றே? - சிவா கேட்டான்.
சொல்றேன்! இங்கதான் நாம தங்கப் போறோம். ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனி ரூம். இந்த பங்களா ஒரு ஐரிஷ் காரனுக்கு சொந்தமானது. பென்லே கோட்டைன்னு பேரு. உள்ளூர்காரங்க வச்சிருக்கற பேர் வெள்ளக்காரன் வங்களா! இதோட கேர்டேக்கர் பேரு காத்தான். உள்ளூர்க்காரன். நமக்கு 10 நாள் உள்வாடகைக்கு விடறான்.
வாடகை எவ்ளோ? - ஜோதிகா முதன்முதலாக வாயைத் திறந்தாள்.
ரூ. 75,000 ஜோ!
என்னது? அந்த குக்கிராமத்தில் இவ்ளோ ரேட்டா? ரொம்ப ஜாஸ்தில்ல சுரேசா? - க்ரேஸ் கேட்டாள்.
இல்ல க்ரேஸ்! நம்ம ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனி ரூம். உனக்கும் கருணாவுக்கும் ப்ரைவசி இருக்கும்.அப்புறம் 10 நாள் டைனிங்கும் காத்தான் பாத்துக்கறான். டெய்லி நான் வெஜ். பத்து நாளில் ஒருநாள் மான் கறி போடறேன்னு அஷ்யூர் பண்ணிருக்கான். இதெல்லாம் பார்க்கும்போது அந்தத் தொகை சீப்தான்! தலைக்கு ரூ. 5000 தான் வரும். பற்றாக்குறை எதுவும் இருந்தா சிவா போட்டுக்கறேன்னு சொல்லிருக்கான்!
எப்போ கிளம்பறோம் சுரேஷ்? - இது விஜய்!
நாளை மறுநாள் கிளம்பணும் விஜய்! அனி.. நோட்டை எடுத்து பேர்களைக் குறிச்சுக்கோ!
சொல்லுடா! சில பேர் இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ணல. அவங்க பேரை மறந்துடாதே!
ஓகே ஓகே.. எழுதிக்கோ.. செட் செட்டாவே சொல்றேன். அப்போதான் எந்தப் பேரும் மிஸ் ஆகாது!
1) பிரபு - குஷ்பு
2) அஜித் - ஷாலினி
3) விஜய் - சங்கீ
4) சூர்யா - ஜோதிகா
5) கருணா - கிரேஸ்
6) கணேஷ் - ஆர்த்தி
7) சரத் - ராதிகா
8) திலீப் - காவ்யா
(அன்பு வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இணைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்காகவே, பிரபலங்களின் பெயர்களைச் சூட்டியிருக்கிறேன். வேறு எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் ரசிகர்கள் எவரேனும் இருந்தால் தயவுசெய்து பொறுத்தருளுங்கள்!)
அப்றம்ம்..
டேய்.. நம்ம பேரை விட்டுட்டியே.. 9) சுரேஷ் - அனிதா..
அதையும் எழுதிக்கோ அனி.. அப்புறம் இந்த கான்ட்ரவர்சியல் பேய்ர்.. 10) சிவா - சித்ரா!
இது நடக்கும்ன்னு தோணல சுரேஷ்! அவ வரமாட்டா.. அவங்க மாமாவும் அனுமதிக்க மாட்டார்! - அனிதா நோட்டை கீழே வீசினாள்.
ஜனாவின் நினைவே அனைவருக்கும் பயத்தைத் தோற்றுவித்தது. என்றாவது அனிதா கல்லூரிக்கு விடுமுறை போடும் நாட்களில் ஜனாதான் சித்ராவை தன் ஓட்டை பைக்கில் அழைத்துவந்து கல்லூரியில் விடுவான். அப்போது அவனைப் பார்த்ததுண்டு.சிவப்பேறிய கண்கள். சுருட்டை முடி, சுருட்டிவிடப்பட்ட சட்டைக் கை. அன்டர்வேர் தெரியும்படி கைலியைத் தூக்கிக் கட்டியிருப்பான் ஜனா. புலியைப் பார்த்த ஆட்டுக்குட்டி போல ஒடுங்கி அமர்ந்து வருவாள் சித்ரா. இறக்கிவிடும்போது இரண்டொரு சொற்களைச் சொல்லி கண்டிப்பான். மிரண்டவாறே தலையாட்டுவாள் சித்ரா!
நாமெல்லாம் போய் அவ அங்கிள்ட்ட பர்மிஷன் கேட்போமே அஜீ! சிவா வராட்டா ட்ரிப் நல்லாருக்காது! - ஷாலினி தன் ஆளிடம் சொன்னாள்.
அப்படி ஒன்னும் அந்த அழுமூஞ்சி சித்ராவை அழச்சுட்டுப் போகவேண்டாம். அதுக்குப் பதிலா வேற யாராவது ஒருத்தியை சிவாவே சூஸ் பண்ணட்டும்! - ராதிகா கடுப்பாகச் சொன்னாள். சிவா வாயைத் திறக்கவில்லை! அவனுக்கு சித்ராவை அழைத்துப்போகவே விருப்பம்!
ஷாலு சொல்ற ஐடியா சரின்னு எனக்கும் தோணுது சுரேஷ்! நாம எல்லோரும் போய் அவர்ட்ட பர்மிஷன் கேட்போமே! அவர் என்ன சிங்கமா புலியா? கல்விச் சுற்றுலான்னு சொல்லிக் கேட்போம். என்ன சொல்றிங்க கைஸ்? - அனிதாவின் கேள்விக்கு ராதிகா தவிர்த்த பிறர் ஆதரவைத் தெரிவித்தனர்!
அப்போ நாம கொளுக்கு மலை போறோம். கலக்கறோம்! - கூட்டம் உற்சாகத்தோடு கூவிற்று. அவர்களுக்குத் தெரியாது.. தாம் அடியெடுத்து வைக்கப் போவது ஒரு மரண மாளிகைக்குள் என்று!! இந்தப் பயணத்துக்கு புறப்படுபவர்களில் பெரும்பாலோர் உயிருடன் திரும்பி வரப்போவதில்லை என்று அவர்கள் அறியமாட்டார்கள்..
'’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
Comments
Post a Comment